ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை காண ஆர்வமுடன் குவியும் மாணவ மாணவிகள்!

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள சைட் மியூசியத்தை காண தினமும் ஏராளமான மாணவ, மாணவிகள் குவிந்து வருகின்றனர்.

Update: 2023-09-27 07:25 GMT

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய தொல்லியல் துறையினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், மண்பாண்டங்கள், தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், வெண்கலப் பொருட்கள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பரம்பில் அகழாய்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை அந்த இடத்திலேயே காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பில் தோண்டப்பட்ட குழியின் மேல் உடைக்க முடியாத தரத்தால் ஆன கண்ணாடி பேழைகள் அமைக்கப்பட்டன.

அங்கிருந்து எடுத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே காட்சிப்படுத்துவதற்கு சைட் மியூசியம் என்று பெயர். இவ்வாறாக அமைக்கப்பட்ட இந்த சைட் மியூசியம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த சைட் மியூசியம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே ஏராளமானோர் வந்து பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் இதை பார்வையிட வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி ரோஸ்மேரி மாடல் பப்ளிக் பள்ளியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள சைட் மியூசியத்தை பார்வையிட்டனர். அவர்கள் சைட் மியூசியம் மற்றும் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர். மாணவ மாணவிகளுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வு மாணவர் ராஜேஷ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். சைட் மியூசியத்தை பார்வையிட்டது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

Similar News