4 கொலை வழக்கு உள்ளிட்ட 25 வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டம் ரௌடி கைது..
4 கொலை வழக்கு உள்ளிட்ட 25 வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ரௌடியை போலீஸார் இன்று கைது செய்தனர்.;
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற பிறகு, போதைப் பொருள் கடத்தல், புகையிலைப் பொருள்கள் கடத்தல் உளளிட்ட சபம்வங்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையப் பகுதியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நேதாஜிநகரை சேர்ந்த ராஜேஷ் என்பரை கொலை செய்த வழக்கில் கைதான அன்னை இந்திராநகரை சேர்ந்த செந்தில்நாதன், கோவில்பட்டியில் போக்சோ சட்டத்தில் கைதான கபில்குமார், சூரங்குடி பகுதியில் சரக்கு வாகனங்களில் கஞ்சா கடத்தியதாக கைதான தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மேலக்கரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த கவி பாரதி (34), விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம். ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த பாண்டியராஜ் (26), மதுரை மாவட்டம், காமராஜபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (31) ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதையெடுத்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில், செந்தில்நாதன், கபில்குமார், கவிபாரஜி, பாண்டியராஜ், விக்னேஷ்வரன் ஆகியோர் இன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 238 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டம் பொறுப்பு வகிக்கும் காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் மேற்பார்வையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சதீஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் குணா மற்றும் உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்கராயகுறிச்சி ஆற்றுப்பாலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி திருவிக நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் காளியப்பன் என்ற காடை காளி (30) என்பதும் அவர் அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையெடுத்து, காளியப்பனை பிடித்த போலீஸார் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குபதிவு செய்து காளியப்பனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான காளியப்பன் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 11 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 8 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5 வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 25 வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.