ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள்!
ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்டு, அவரது உறவினரிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வாசல் அருகே மூதாட்டி ஒருவர் தனியாக இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் உரிமையில் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜிக்கு நேற்று இரவு தகவல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் அன்னராஜ் உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் சேவியர் பிராங்க்ளின், முதல் நிலை பெண் காவலர் லதா சுகன்யா மற்றும் பெண் காவலர் மாரியம்மாள் ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த மூதாட்டியை மீட்டனர்.
அந்த மூதாட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் லிங்கபுஷ்பம் (75) என்பதும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆத்தூர் தனிப்பிரிவு காவலர் ஜெபராஜ் ரமேஷிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மூதாட்டியின் அடையாளங்கள் குறித்து உரிய தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த மூதாட்டி ஆத்தூர் குலவைநல்லூர் பகுதியில் தனியாக வசித்து வருவதும் அவர்களுக்கு மூன்று மகன்கள் இருப்பதும் அதில் ஒரு மகன் முள்ளக்காடு ராஜீவ்நகர் பகுதியில் வசித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மூதாட்டி லிங்கபுஷ்பம் எழுந்து உட்கார முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்தார். அவரது சூழ்நிலையை உணர்ந்த முதல் நிலைக் காவலர் லதா சுகன்யா மற்றும் காவலர் மாரியம்மாள் ஆகியோர் மூதாட்டி லிங்கபுஷ்பத்தை ஒரு ஆட்டோவில் பத்திரமாக தூக்கி வைத்தனர்.
பின்னர், காவலர் மாரியம்மாள் உடன் சென்று முள்ளக்காடு ராஜீவ்நகரில் உள்ள மூதாட்டி லிங்கபுஷ்பத்தின் மகனான உதயகுமாரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். காவல்துறையினரின் இந்தச் செயலை அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதற்கிடையே, ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்டு, அவரது உறவினரிடம் ஒப்படைத்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய பெண் காவலர்கள் லதா சுகன்யா மற்றும் மாரியம்மாள் உட்பட ஒப்படைக்க உதவிய அனைத்து போலீஸாருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.