மக்கள் தொடர்பு முகாம்: ரூ. 6.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 6.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொங்கராயக்குறிச்சி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் மொத்தம் 89 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 68 ஆயிரத்து 658 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:
மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் அந்தந்த துறையின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியுடையவர்கள் அனைவருக்கும் சென்றடையச் செய்ய வேண்டும், தகுதியுடையவர்கள் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதுதான் இந்த முகாமின் நோக்கம் ஆகும்.
தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்விதான் அழியாத சொத்து ஆகும். எனவே உங்களுக்கு கல்வி கொடுத்தால் வருங்கால தலைமுறையினரையும் அது மேம்படுத்தும்.
நாம் படிப்பதற்கும், தொழில் செய்யவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் உங்கள் வீடுகளுக்கே சென்று நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. உங்கள் கிராமத்தில் இருந்து ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி வந்ததுபோல் வருங்காலத்தில் நீங்களும் படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு வர வேண்டும். அரசின் திட்டங்களை பற்றி நீங்களும் தெரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் தெரிவித்து அனைவரும் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.
முன்னதாக, இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த திட்டவிளக்கக் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டார்.