கிராம சபை கூட்டத்தின் நோக்கம்: தூத்துக்குடி ஆட்சியர் விளக்கம்!
மக்களுக்கு தேவையான திட்டங்களை மக்களே தீட்டி அதனை அரசு திட்டங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதுதான் கிராம சபையின் நோக்கம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், மகளிர் திட்டம் மூலம் இரண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் உதவி, குமாரபுரம் பரணி மகளிர் சுய உதவிக்கழுவிற்க்கு பரிசு மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 5 தூய்மை காவலர்களுக்கு பரிசுகள், வேளாண்மை துறை மூலம் 5 விவசாயிகளுக்கு இடுபொருட்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 2 பேருக்கு மருந்துகள் தோட்டக்கலைத்துறை மூலம் 3 பேருக்கு பழத்தொகுப்பு, காய்கறி விதைத்தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:
கிராமசபை போன்ற அமைப்புகள் கிராமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்திலேயே பரவலாக்கப்பட்ட அதிகாரத்தை கிராம ஊராட்சிக்கு கொடுத்து இருக்கிறார்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களை மக்களே தீட்டி அதனை அரசு திட்டங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதுதான் கிராம சபையின் நோக்கம் ஆகும்.
இந்த பகுதியில் இருக்கின்ற அனைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கிராம சபையின் உறுப்பினர்களாக இருக்கின்றீர்கள். உங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றவை அரசின் மூலம் நிறைவேற்றுவதற்குதான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரை சேமிக்க தயாராக இருக்க வேண்டும். மேலும், டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை குழந்தைகளிடம் தெரிவித்து ஊக்கப்படுத்த வேண்டும். உங்கள் கிராமம் பசுமையான கிராமமாக இருக்க வேண்டும்.
வருங்கால சந்ததியினரை காப்பதற்கு பசுமை திட்டங்கள் மிகவும் அவசியம். அங்கன்வாடிகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் குளங்கள் என எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் மரக்கன்றுகள் நட வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் எலுமிச்சை, நெல்லி, மா உள்ளிட்ட 5 வகையான மரக்கன்றுகள் தருகிறார்கள். கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்துக்கொடுக்க வேண்டும். மக்கும் குப்பைகளில் இருந்து நமக்கு உரங்கள் கிடைக்கும். இதற்கு நீங்கள் அனைவரும் தூய்மை பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் திட்டங்களில் இருந்து அடிப்படை, கட்டமைப்பு வசதிகள், தனிநபர் பயன்பெறும் திட்டங்கள் பற்றி கிராமசபை கூட்டத்தில் பேச வேண்டும். கிராமத்தை முன்னேற்றும் செயல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உலகநாதன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகலா, துணைத் தலைவர் பண்டாரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.