வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு: பா.ஜ.க. நிர்வாகி கைது
வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் அந்த தீர்ப்பை பிரதிபலிக்கும் வகையிலும், யுவராஜுக்கு ஆதரவாகவும் டுவிட்டர் பக்கத்தில் கட்டெறும்பு என்ற பெயரில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதிவு ஜாதி மோதலையும், வன்முறையையும் தூண்டும் விதமாக இருப்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் விதமான கருத்துக்களை பதிவு செய்தாக திருச்செந்தூரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கட்டெறும்பு என்ற இசக்கியிடம் ஶ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மாயவன் மற்றும் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, இசக்கி மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு பா.ஜ.க. பிரமுகர் கட்டெறும்பு என்ற இசக்கி தனது உடல் நிலை குறித்தும் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்றும் போலீசாரிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் போலீசாரால் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்பு இசக்கி ஆஜர் படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் ஶ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் இசக்கி கையெழுத்திட வேண்டும் என்றும் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் கட்டெறும்பு என்ற இசக்கி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.