கடம்பாகுளம் கரையோரங்களில் ஒரு லட்சம் பனைமர விதைகள் நடும் பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம், கடம்பாகுளம் கரையோரங்களில் ஒரு லட்சம் பனை மர விதைகள் நடும் பணியை மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க, கடற்கரை, தீவுப் பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளில் கரையை வலுப்படுத்தும் வகையிலும் பனைமர விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
மண் அரிப்பை தடுக்க ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கானகரை பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் மேலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயள்ள கடம்பாகுளம் கரையோர பகுதிகளில், மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் அங்கமங்கலம் ஊராட்சி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஒரு லட்சம் பனைமர விதைகள் மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா அங்கமங்கலத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்தவர்களை அங்கமங்கலம் பாலமுருகன் வரவேற்றார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி தலைமை தாங்கினார். செல்லையா குரூப் ஆப் கம்பெனி அதிபர் செல்வகுமார், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல். பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து கடம்பாகுளம் கரையோரங்களில் ஒரு லட்சம் பனைமர விதைகள் மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அவர் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து கடம்பாகுளம் கரையோரங்களிலும் மற்றும் கடம்பா மறுகால் ஓடைப்பகுதியிலும் பனை மர விதைகள் விதைக்கப்பட்டன. விழாவில் அங்கமங்கலம் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணம்மாள், ஊராட்சி கணினி இயக்குநர் ஜென்சி, பணித்தள பொறுப்பாளர் கஸ்தூரி, பரமேஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.