சிறுமி மரணம்: ஸ்ரீவைகுண்டத்தில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
சிறுமி மரணம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளத்தை சேர்ந்த கணேசன் என்பவரது இரண்டு வயது மகள் சுகிர்தா உடல் நலமின்றி காணப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை ஶ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, சுகிர்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எதிர்பாராத விதமாக மரணம் அடையும் போது பிரேதப் பரிசோதனை செய்ய திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஶ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்து முடித்து சிறுமி சுகிர்தாவின் உடலை ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என பெற்றோரும், உறவினர்களும் மருத்துவர்களிடம் தெரிவித்தனர். மேலும், அந்த கோரிக்கையை வலியுறுத்தி இசவன்குளத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் உள்ள திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிறுமியின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என பெற்றோர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து சிறுமியின் உடலை ஒப்படைப்பதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டதால் போக்குவரத்து தொடங்கியது. சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்தும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.