ஆதிச்சநல்லூரில் நாளை உலகத்தர அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

ஆதிச்சநல்லூரில் நாளை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.;

Update: 2023-08-04 13:07 GMT

ஆதிச்சபுரத்தில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கிடையில் தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் ஐந்தரை ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டு ஆதிச்சநல்லூர் பரம்பில் பி சைட்டில் ஆன் சைட் எனப்படும் எடுத்த பொருட்களை அந்த குழியில் வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அதை சுற்றி கண்ணாடி பேழைகள் அமைத்து மேல் இருந்து குழியின் உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் பார்வையிடுகிறார். இதற்காக இதை சுற்றிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட இயற்கை புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே புகைப்பட கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

அதை பார்வையிட்டு பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு சென்று அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மேடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News