ஶ்ரீவைகுண்டத்தில் மாற்றுத்திறனாளியை வங்கி ஊழியர்கள் அலைக்கழித்தாக புகார்

ஸ்ரீவைகுண்டம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை வங்கி ஊழியர்கள் அலைக்கழித்ததாக வயதான மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-17 14:45 GMT

பாதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூதாட்டி சுந்தரி.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலநாட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரி. இவரது மகள் சித்ரா செல்வி. சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். சுந்தரி தனது பகுதி அருகிலேயே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு செய்துங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் வங்கி கணக்கு உள்ளது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையும், 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் சம்பளமும் செய்துங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ளது. அந்த வங்கி கணக்கில் தான் இரண்டு பணம் வரவு வைக்கப்படும் என சுந்தரி தெரிவித்து உள்ளார். 

இந்த வங்கியில் 100 நாள் பணி சம்பளம், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித்தொகை என பல்வேறு உதவித்தொகைகளும் பயனாளிகள் பெற ஏதுவாக வங்கியின் வெளியில் ஒருவர் இருப்பார். அவர் தான் இவர்களுக்கு பணம் வழங்குவார்.

இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் 100 நாள் வேலையை முடித்து விட்டு தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் சுந்தரி தமிழ்நாடு கிராம வங்கிக்கு வந்துள்ளார். பணம் எடுப்பதற்காக கேட்டதற்கு பணம் பணம் கொடுக்கும் நபர் வெளியே சென்று விட்டதாகவும், அவரை தேடிச் சென்று நீங்கள் பணம் வாங்கி கொள்ளுங்கள் என்றும் வங்கியின் காசாளர் கூறியுள்ளார்.

அதற்கு சுந்தரி, மனநலம் பாதிக்கப்பட்ட மகளை வைத்துக் கொண்டு என்னால் இந்த நேரத்தில் அழைய முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் எதையும் காதில் வாங்கி கொள்ளாத பெண் காசாளர் சாப்பிட சென்று விட்டதாக அந்த சுந்தரி என்ற வயதான பெண்மணி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் இன்று வங்கியில் சென்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். ஆனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வங்கியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்துங்கநல்லூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து காவல் ஆய்வாளர் மற்றொரு பணிக்காக வெளியில் சென்றுள்ளதால் வந்தபின்னர் காவல்நிலையத்தில் வைத்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இந்த உதவித்தொகையை வழங்கும் பணியாளர்கள் மாற்றுத்திறாளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வழங்குகின்றனர். அதுபோல் இவர்களுக்கும் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News