பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றத்துக்கு எதிராக ஏரலில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-05-01 12:27 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவுத் துறை சார் பதிவாளர் அலுவலகத்தை முக்காணி அருகே இடமாறுதல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஏரல் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போதிய இடவசதி உள்ளதால் அங்கேயே சார் பதிவாளர் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஏரல் சார் பதிவாளர் அலுவலகத்தை ஏரலிலேயே அமைக்க வேண்டும், ஏரல் அரசு பெண்கள் பள்ளி கட்டிடங்கள் இடிந்து ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் உடனடியாக புதிய கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும், போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு ஏரலில் இயங்கி வரும் வார சந்தையை தாமிரபரணி ஆற்றுப் பாலம் அருகே உள்ள இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரல் காந்தி சிலை அருகே அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏரல் பேரூராட்சி கழக செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்னை சரவணன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சண்முகநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, நகர செயலாளர் திருச்செந்தூர் மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தசரதபாண்டியன், செயலாளர் தர்மராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News