சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டர்
சாத்தான்குளம் அருகே காட்டுப் பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதில் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி-நாசரேத் சாலைக்கு நடுவே காட்டுப்பகுதியில் கடந்த 10 தினங்களாக நவீர ரக கார்கள் அவ்வப்போது வந்து சென்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதி பரபரப்பாக இருந்துள்ளது. கார்கள் வந்து சென்ற இடத்தில் இரவோடு இரவாக தகரத்தால் சுற்றுச்சுவர் அடைக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியா, அமெரிக்கா நாட்டின் கொடிகள் நடப்பட்டிருந்தன.
அந்த இடத்தின் அருகே ஏதோ வாகனம் இறங்கும் வண்ணம் ஒரு தற்காலிக பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. தார்ச்சாலையும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நின்றவர்கள் பரபரப்பாக யாரையோ எதிர்பார்த்து நின்றது போல் தெரிந்தது.
இந்த பரபரப்பான நேரத்தையும் இடத்தையும் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஒரு ஹெலிகாப்டர் வருகிற சத்தம் கேட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் கடற்படை தளத்திற்கு அடிக்கடி ஹெலிகாப்டர் வந்து செல்லும் என்பதால் அங்கு செல்வதற்காக ஹெலிகாப்டர் இந்த வழியாக சென்று கொண்டிருக்கிறது என நினைத்த கிராமத்து மக்கள் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, வானத்தில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுதளத்தில் தரை இறங்கியது. அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி நின்றனர். தரையில் இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய சிலர் அருகே நின்ற விலை உயர்ந்த காரில் ஏறினர்.
அந்த விலை உயர்ந்த கார் மெதுவாக அவர்களுக்காக தற்காலிகமாக தயார் செய்யப்பட்டிருந்த ஷெட்டுக்கு சென்றது. அதன் பின்னர் உள்ளே நடந்தது என்ன என்பது யாருக்கும் தெரியாது. அங்கு நின்ற சிலரிடம் விசாரித்ததில் இங்கு ஏதோ பெரிய கம்பெனி வருவதாகவும், காரின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி எனவும் கூறினர். சிறிது நேரத்தில் வந்த வாகனம் மீண்டும் அதே ஹெலிகாப்டர் நின்ற இடத்திற்கு சென்றது. காரில் வந்தவர்கள் அதில் ஏறி கிளம்பினர்.
இதை அங்கு நின்ற சில இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் தற்போது சாத்தான்குளம் பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. சாத்தான்குளம் காட்டுப் பகுதிக்குள் திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.