சாத்தான்குளம் ஒன்றியத்தில் 118 பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 118 பயனாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புத்தன்தருவை, அரசூர், நடுவக்குறிச்சி மற்றும் சாஸ்தாவிநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியின்போது, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பல்வேறு துறைகள் மூலமாக வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா, நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு, மாற்றுத்திறனாளி ஓய்வூதிய உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நிவாரணத்தொகை, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகங்கள்;, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், விவசாய இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகள், பண்ணைக்கருவிகள், பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள், அயல்நாட்டு பயிற்சிக்கான ஒப்பந்த சான்று, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் உதவி, நிவாரண உதவித்தொகை என மொத்தம் 118 பயனாளிகளுக்கு 10 லட்சத்து 97 ஆயிரத்து 503 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி. பேசியதாவது,
மக்கள் களம் நிகழ்ச்சி என்பது நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் என அத்தனை பேரும் உங்கள் ஊருக்கு உங்களை தேடி வந்து உங்களை நேரில் சந்தித்து உங்களது கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண்பதற்கான நிகழ்ச்சி ஆகும்.
எனவே மக்களுக்கு ஒரு கோரிக்கை என்றால் மனுவை எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட எந்தவொரு அரசு அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லாமல் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் உங்களிடம் நேரடியாக சாலை வசதி, குடிநீர் வசதி, குளங்களை தூர்வாருதல் போன்ற கோரிக்கை மனுக்களைப் பெற்று எந்தெந்த மனுக்களில் நடவடிக்கை எடுக்க முடியுமோ அதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். மக்களை தேடி மருத்துவம் என்ற மிகச்சிறப்பான திட்டத்தின் மூலம் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை என்ற வாக்குறுதியை நிறைவேற்றி இன்று 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர்கள் பயன்பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சிலருக்கு விடுபட்டு இருக்கக்கூடிய சூழலும் இருக்கிறது. அவர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்தால் நியாயமாக கிடைக்கக்கூடிய வகையில் உள்ள மகளிர்களுக்கு உரிமைத்தொகை ரூ. 1000 வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே நியாயமாக மகளிர் உரிமைத்தொகை யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும் என கனிமொழி எம்.பி. பேசினார்.
மேலும், நடுவக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தட்டார்மடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் விவசாய விளைபொருட்களை வைப்பதற்கான சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கும், ரூ. 8.03 லட்சம் மதிப்பீட்டில் மீன் வார சந்தை கட்டிடம் கட்டுவதற்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.