தூத்துக்குடி மாவட்டத்தில் 112 பயனாளிகளுக்கு ரூ. 38.29 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில், 112 பயனாளிகளுக்கு ரூ. 38.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-11-10 05:39 GMT

மக்கள் களம் நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து கனிமொழி எம்.பி. மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளக்குறிச்சி, முதலூர், சுப்பராயபுரம் மற்றும் பன்னம்பாறை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.

அப்போது, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறைகள் மூலமாக வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா, நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு, மாற்றுத்திறனாளி ஓய்வூதிய உதவித்தொகை, உழவர் அடையாள அட்டை, விவசாய இடுபொருட்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் உதவி என மொத்தம் 112 பயனாளிகளுக்கு 38 லட்சத்து 29 ஆயிரத்து 63 ரூபா் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்காக குறிப்பாக பெண்களுக்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர்கள் மாதம் ரூ. 1,000 பெறுகிறார்கள்.

அதிக இளைஞர்கள், இளம்பெண்கள் உயர்கல்வி பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதற்காக இந்தப் பகுதியில் ரூ. 2.31 கோடி ஒதுக்கீடு செய்து உரக்கிடங்கு, பேவர்பிளாக் சாலைகள், குடிநீர் தொட்டிகள் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துகொண்டு இருக்கிறார்.

பன்னம்பாறை ஊராட்சியில் புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் பெற்று தருவதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சொக்கலிங்கபுரத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் முருகேசன்(முதலூர்), சுயம்புதுரை (சுப்பராயபுரம்), அழகேசன் (பன்னம்பாறை), திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், சாத்தான்குளம் வட்டாட்சியர் ரதிகலா, சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், கருப்பசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News