ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகம் மீது புகார்.. ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ நேரில் ஆய்வு..
தூத்துக்குடி அருகேயுள்ள ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சண்முகையா இருந்து வருகிறார். திமுகவைச் சேர்ந்த இவர், இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் சிலர் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று திடீரென ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும், மருத்துவ உபகரணங்கள் பற்றியும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இனிமேல் எந்த விதமான புகார்களும் மருத்துவமனை நிர்வாகம் பற்றி பொதுமக்கள் அளிக்காதவாறு அனைவரும் நடந்து கொள்ளும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாக கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டார்.
நியாயவிலைக் கடை கட்ட பூமி பூஜை:
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட டி .சவேரியார்புரத்தில் இயங்கி வந்த நியவிலைக்கடை கட்டிடம் பழுதாகி இருந்ததால் புதிதாக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை டி. சவேரியார்புரத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.
என்சிசி மாணவர்கள் தூய்மைப் பணி:
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட திரேஸ்நகரில், மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம் சார்பில், விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தேசிய மாணவர்படை பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஒருநாள் சமூகப் பணியாக தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு, தூய்மை பணியை தொடங்கி வைத்து, தேசிய மாணவர்படை மாணவர்களோடு சேர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.
இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, திமுக ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினமணி, பள்ளி நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, என்சிசி அதிகாரி ஜீஸஸ் ஆல்பன், கௌதம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.