தந்தை-மகன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.. தூத்துக்குடி எஸ்.பி. அதிரடி...

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் கொலை முயற்சி வழக்கில் கைதான தந்தை-மகன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-01-11 07:13 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபடுவோர், புகையிலை பொருட்கள், கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 270 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரநல்லூர் பகுதியில், கடந்த மாதம் 16 ஆம் தேதி ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் (50) மற்றும் அவரது மகன் மாயகிருஷ்ணன் (20) ஆகியோரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இதைத்த்தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கில் கைதான முருகன் மற்றும் அவரது மகன் மாயகிருஷ்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கில் கைதான முருகன், அவரது மகன் மாயகிருஷ்ணனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் முருகனையும், அவரது மகன் மாயகிருஷ்ணனையும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News