ஓட்டப்பிடாரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது : 7 பவுன் நகை மீட்பு

வழிப்பறி சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்

Update: 2021-10-06 16:15 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்  பகுதியில் பிடிபட்ட வழிப்பறி திருடன்

பெண்களிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி திருடரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வழிப்பறி திருடரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர். ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதியில் தனியாக செல்லும் பெண்களை, மர்மநபர் பின் தொடர்ந்து சென்று சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த வகையில், கடந்த ஆண்டு 19-8-20 அன்று ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பொம்மையாபுரம் முத்துலட்சுமி என்பவர், தாலுகா அலுவலகத்திற்கு உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற மர்மநபர், அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

இதேபோன்று, 15-9-20 அன்று கே.வேலாயுதபுரம் பெரியசாமி மனைவி மல்லிகா இரவு காற்றோட்டத்திற்காக வீட்டுக்கதவைத் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். மேலும், முப்பலி வெட்டி கிராமத்தை சேர்ந்த காசி மனைவி காசியம்மாள் என்பவர் 100 நாள் பணி முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், அவரிடம் இருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றார்.

இப்படி தொடர்ந்து நடைபெற வழி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மர்மநபரை பிடிக்க மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். வழிப்பறி சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.இதில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட கொங்கராயகுறிச்சி கீழத் தெருவை சேர்ந்த காந்தி மகன் முத்துக்குமார் ( 39) என்பது இந்த வழப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளும் மதுரையில் திருடப்பட்டது என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News