ஓட்டப்பிடாரத்தில் தலையாரி உள்ளிட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு: 4 இளைஞர்கள் கைது
ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூரில் தலையாரி உட்பட மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி (29) என்பவர் அந்தப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஊரில் உள்ள துக்க நிகழ்ச்சி ஒன்றில் மது போதையில் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை மற்றும் சங்கரபாண்டி ஆகிய இருவரிடம் தகராறு செய்துள்ளார்.
இதனை மனதில் வைத்துக் கொண்டு அவரது உடன் பிறந்த தம்பி முருகன் மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் முகேஷ் மற்றும் மாரிச்செல்வம் ஆகிய நான்கு பேரும் மது போதையில் இருந்துள்ளனர். போதை தலைக்கேறியதால் செய்வதறியாமல் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிமாரியப்பன் மற்றும் அழகு ராம் ஆகியோரது ஓட்டு வீடுகளை சேதப்படுத்தி உள்ளனர்.
அதை தட்டி கேட்ட வேத நாராயணன் என்பவருக்கு இடது கை மற்றும் நெற்றியில் அரிவால் வெட்டு விழுந்துள்ளது. இதேபோல, கர்ணன் என்பவருக்கு வயிற்றில் கீறல் காயமும் ஏற்பட்டது. தொடர்ந்து அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது தலையாரி துரைராஜ் என்பவர் எப்போதும்வென்றான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து தட்டி கேட்ட தலையாரி துரைராஜ் என்பவரை இடது கையில் வெட்டியுள்ளனர்.
இதையெடுத்து ஊரில் உள்ளவர்கள் மேற்கண்ட நான்கு நபர்களையும் பிடித்து நன்கு கவனித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து எப்போதும்வென்றான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயம் அடைந்த வேத நாராயணன் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், தலையாரி துரைராஜ் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.