வட்டார கல்வி அலுவலரை கண்டித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலரின் லஞ்சம், ஊழல் முறைகேடுகளைக்கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-10-01 15:01 GMT

துாத்துக்குடி மாவட்டம்  புதுக்கோட்டையில்  வட்டாரக்கல்வி அலுவலரைக்  கண்டித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் தூத்துக்குடி ஊரகம் புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலரின் லஞ்சம், ஊழல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை கண்டித்து புதுக்கோட்டையில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கலை உடையார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆண்டனி சார்லஸ், மாவட்ட துணைத்தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் லஞ்சம், ஊழல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுவரும் புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் மற்றும் கருங்குளம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொஸங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செல்வராஜ் கூறுகையில், தூத்துக்குடி ஊரகம், புதுக்கோட்டை ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பாஸ்கரன் லஞ்சம், ஊழல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் அரசனாக செயல்பட்டு கல்வித்துறை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

ஒன்றியத்தில் 75 சதவீத பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருப்பதால் இவரது முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் கோரிக்கை ஒவ்வொரு ஆசிரியரிடமும் பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் பெற்று அனுமதித்துள்ளார். பணம் தராத 36 ஆசிரியர்களின் ஊதியத்தை அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் மேற்படி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. இது ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் வரை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செயலாகும். இந்நிலையில் அந்த 36 ஆசிரியரிடமும் ஊக்க ஊதியம் பெற அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறி தலா பத்தாயிரம் வீதம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார்.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை, மீச்சிறப்பு நிலை ஆகியவற்றை வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளித்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல், ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணி மாறுதல், சேமநலநிதி முன் பணம் பெறுதல் என அனைத்திலும் பணம் கொடுத்தால் மட்டுமே அனுமதியளிக்கிறார்.

மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை நேரடியாக பள்ளிக்கு கொண்டு சென்று வழங்குவதற்கு ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலகம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தூத்துக்குடி வட்டார கல்வி அலுவலர் அவ்வாறு வழங்காமல் தலைமை ஆசிரியர்களை அவர்களது சொந்த செலவில் எடுத்துச்செல்ல வைத்துள்ளார். இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக அரசு ஒதுக்கீடு செய்த நிதியை கையாடல் செய்துள்ளார்.

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் வருமானவரி கணக்கை வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் கடமையாகும். ஆனால் அதற்காக ஒவ்வொரு ஆசிரியரிடமும் கடந்த 4 ஆண்டுகளாக தலா ரூ.300 வசூல் செய்து முறைகேடு புரிந்துள்ளார். திருவைகுண்டம் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றிய ஆசிரியர்களின் கடன் விண்ணப்பங்களில் கையெழுத்திட பணம் கேட்டார். பணம் கொடுக்காத ஆசிரியரின் விண்ணப்பங்கள் தொலைந்து விட்டதாக பொய் கூறினார். இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்கம் தலையிட்டு கடும் போராட்டத்திற்கு பின்பு புதிய விண்ணப்பங்களை பெற்று கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

ஆனால், திருவைகுண்டம் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலருரிடம் இனிமேல்தான் பரிந்துரை செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் தனக்கு ரூ. 5 ஆயிரம் பணம் வசூலித்து தரும்படி நிபந்தனை விதித்துள்ளார். மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி 15.09.2021 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட கிளையின் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி விசாரணை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் வாக்குமூலம்அளித்துள்ளனர். அவ்வாறு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விசாரணைக்காக மாவட்ட கல்வி அலுவலகம் சென்ற ஆசிரியர்களை வழிமறித்து எனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தால் நடவடிக்கை எடுப்பேன் என கூறி மிரட்டி பல ஆசிரியர்களை விசாரணைக்கு செல்ல விடாமல் தடுத்து உள்ளார். தான் செய்த குற்றங்களிலிருந்து தப்பிக்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இவரை வட்டார கல்வி அலுவலராக வைத்துக்கொண்டே இவர் மீது விசாரணை நடத்தினால் உண்மை நிலை வெளிவராது எனவே இவர் செய்த தவறுக்காக தற்காலிகப் பணிநீக்கம் செய்து விசாரணை நடத்துவதே சரியானதாகும் என்றார்.

மேலும் கருங்குளம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் நீலநாராயணன் ஆசிரியர் விரோதபோக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அவர் மீது ஆசிரியர்கள் புகார் மனு அளித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை கல்வித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மாவட்ட கல்வித் துறையின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்ட கல்வித் துறையில் தொடர்ந்து தவறிழைத்துக்கொண்டிருக்கும் மேற்கண்ட அலுவலர்கள் மீது நியாயமான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு கல்வித்துறையின் மாண்பை காக்க வேண்டும் என்றார்.

இதில், மாநிலச்செயலாளர் பிரமநாயகம், கல்வி மாவட்டத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் எபனேசர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலத் துணைத்தலைவர் என்.வெங்கடேசன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகம் மாநில அமைப்புச்செயலாளர் ஜி.சேகர் போராட்ட ஆதரவு உரையாற்றினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் ஜெயசீலி நன்றியுரையாற்றினார்.

Tags:    

Similar News