Cooperative Week Ceremony ஓட்டப்பிடாரம் பகுதியில் கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்
Cooperative Week Ceremony தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
Cooperative Week
தமிழகம் முழுவதும் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பரிவல்லிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல் எல்லைக்கு உட்பட்ட இளவேலங்கால் பகுதியில், கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு, உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் கடன் வழங்கும் விழா கோவில்பட்டி சரக துணைப் பதிவாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பயிர்கடன் மற்றும் கால்நடை பாரமாரிப்பு கடன், விவசாய கூட்டு பொறுப்பு குழு கடன் விண்ணப்பங்கள் மற்றும் புதிய உறுப்பினர் விண்ணப்பங்களை வழங்கினார்.
விழாவில், ஓட்டப்பிடாரம் கள அலுவலர் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் பாலமுருகன், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம் டேனியல் ராஜ், பரிவல்லிக்கோட்டை கூட்டுறவு வங்கி செயலாளர் அரி ராமகிருஷ்ணன், சங்கத்தின் செயலாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, பூவாணி பகுதியில் உள்ள கம்மவார் மஹாலில் கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சியைச் சீரமைத்தல் என்ற கருப்பொருள் தலைப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் மேளா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சங்க செயலாட்சியர் ஆழ்வார் குமார் வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் நடுகாட்டுராஜா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மேலுர் கூட்டுறவு நகர வங்கியின் துணைப் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் சங்கர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் சாம் டேனியல் ராஜ் கூட்டுறவு உறுதிமொழியினை வாசித்தார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பயனாளிகளுக்கு ரூ. 2.23 கோடி அளவிற்கு மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட கடன்களை வழங்கினார். பூவாணி கூட்டுறவு சங்க செயலாளர் குமரேசன் நன்றி தெரிவித்தார்.