வாக்காளர்களுக்கு பணம்- அதிமுக, திமுகவினரிடம் விசாரணை

Update: 2021-04-05 12:30 GMT

ஓட்டப்பிடாரம் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த 6பேர் சிக்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஓசனூத்து கிராமத்தில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா நடைபெறுவதாக தூத்துக்குடி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி முத்துக்குமார் என்ற காளிராஜ் தலைமையில் சிறப்பு எஸ்ஐ கதிரேசன் மற்றும் குழுவினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு காரில் சோதனையிட்டபோது ரூ.5 லட்சத்து 84ஆயிரத்து 180-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் கண்ணன் (50), புதூர் பாண்டியாபுரம் வேலாயுதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மேகலிங்கம் மகன் ஜெயராம் (32), கவர்னகிரியைச் சேர்ந்த சன்னாசி என்பவர் மகன் அருண்குமார் (20), ஆகிய 3பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த வாக்காளர் ஆவணகுறிப்பு, அவர்கள் வந்த காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபோல் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சிலோன் காலனி பகுதியில் பணம் விநியோகம் செய்து கொண்டிருந்ததாக ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவீந்திரகுமார் (53), பாக்கியம் மகன் ராஜா (66), தேவராஜ் மகன் கலைமணி (51) ஆகிய 3பேரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்த ரூ.25ஆயிரம் பணம், மற்றும் வாக்காளர் பட்டியல் ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News