கட்டாலங்குளத்து மன்னன் வீரன் அழகு முத்துகோன் 311 வது பிறந்தநாள்
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வரலாற்று நூல்கள் பலவும் 1857 ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகத்தை 'முதல் சுதந்திரப் போர்' - என்று கூறும் நிலையில், அதற்கு சுமார் 100 ஆண்டுகள் முன்பே வீரன் அழகுமுத்துக்கோன் - ஆங்கிலேயரை எதிர்த்து உயிர்துறந்தார் என்பதை தமிழகம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ( முன்னர் திருநெல்வேலி ) உள்ள கட்டாரங்குளம் பகுதியில் ஆட்சி செய்த அரசரே வீரன் அழகுமுத்துக் கோன் ஆவார். 1710 ஜூலை 11 ஆம் தேதி பிறந்து, 1750 ஆம் ஆண்டில் அரசராக முடிசூடிய இவர், எட்டையபுரம் அரசருக்குக் கீழே ஒரு குறுநில மன்னராகவும், எட்டையபுரம் அரசின் படைகளுக்கு ஒரு தளபதியாகவும் விளங்கினார்.
தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் (அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.
1755ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் தளபதிகள் அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் என்று அழைக்கப்பட்ட கான்சாகிப் ஆகியோர் எட்டையபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூல் செய்ய வந்தனர். எட்டையபுரம் அரசர் இவர்களுக்கு வரி கொடுக்க மறுத்து, 'வணிகம் செய்ய வந்தவர்கள் வரி கேட்பதா?' -என்று கடிதம் எழுதினார்.
கடிதத்தைக் கண்ட கான்சாகிப் பீரங்கிப் படையுடன் வந்து எட்டையபுரத்தைத் தாக்கத் தொடங்கினார். இந்த பதட்டமான சூழலில் எட்டையபுரம் மன்னரையும் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்த வீரன் அழகுமுத்துக்கோன், வெளியே சென்று படைதிரட்டத் தொடங்கினார்.
தனது படையில் இணைந்தவர்களை, வீரன் அழகுமுத்துக்கோன் பெத்தநாயக்கனூர் கோட்டையில் தங்கவைத்தபோது, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அங்கும் கான்சாகிப்பின் படைகள் தாக்கின. இந்தத் தாக்குதலில் வீரன் அழகுமுத்துக் கோனின் காலில் குண்டு பாய்ந்தது, 3 மணிநேரம் ரத்தம் வழிய போரிட்ட வீரன் அழகுமுத்துக் கோனையும், அவரது 6 தளபதிகளையும் 248 வீரர்களையும் ஆங்கிலப்படை சிறை பிடித்தது.
முதலில் அனைத்து வீரர்களின் வலது கரங்களும் வெட்டப்பட்டன. பின்னர் வீரன் அழகுமுத்துக் கோனும் 6 தளபதிகளும் ஒரு பீரங்கியின் முன் நிறுத்தப்பட்டனர். 'மன்னிப்பு கேட்டு, தனக்கு உதவியவர்களைக் காட்டிக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம்' - என்று கூறப்பட்டபோது, அதனை வீரன்முத்துக்கோன் உள்ளிட்டவர்கள் ஏற்காததால் பீரங்கி சுடப்பட்டது, 7 பேரும் உடல்கள் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு, எட்டையபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாயில் எரியூட்டப்பட்டது. இந்தத் தியாகம் நடந்த ஆண்டு கி.பி.1759.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 1996 ம் ஆண்டு சென்னை எழும்பூரில் 'வீரன் அழகு முத்துக்கோன்' சிலையைத் திறந்து வைத்தார். அந்த உருவச்சிலைக்கு தொடர்ந்து அரசு மரியாதைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு கடந்த 2004ஆம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 'வீரன் அழகுமுத்துக் கோன் நினைவு மண்டபம்' ஒன்றும் அவர் ஆண்ட கட்டாலங்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் 11 ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2012 ஆம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று இந்திய அரசின் சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது.