கோவில்பட்டியில் காவல்துறையை சேர்ந்தவர் வீட்டில் புகுந்த திருடர்கள்
கோவில்பட்டியில் காவல்துறை எஸ்பி அலுவலக முதுநிலை சுருக்கெழுத்து செய்தியாளர் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருட முயற்சி;
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட விநாயக நகர் பகுதியை சேர்ந்தவர் அழகுமுத்து மாரியப்பன். இவர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை முதுநிலை சுருக்கெழுத்து செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் பெரம்பலூரில் தங்கியுள்ளார். அவ்வப்போது கோவில்பட்டியில் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் அழகு முத்துமாரியப்பன் வீட்டில் திடீரென சத்தம் கேட்பதை பார்த்த அருகில் வசிப்பவர்கள், அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு திறக்கப்பட்டு இரு நபர்கள் இருப்பதை பார்த்தனர். பொதுமக்களைப் பார்த்தும் அந்த 2 மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். பொதுமக்கள் சிறிது தூரம் அந்த 2 மர்ம நபர்களை விரட்டியுள்ளனர். ஆனால் அந்த இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் வாசல் கதவு. பீரோ, பூஜை அறை, சமையலறை உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் எதுவும் இல்லை என்பதால் அங்கிருந்து துணிமணிகளை எடுத்து சிதறி வீசியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் அழகுமுத்து மாரியப்பனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரது குடும்பத்தினர் வந்த பின்னர் தான் எதுவும் திருடு போய் இருக்கிறதா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.