தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள வாலம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. சுமார் 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த புதுக்கண்மாய் மூலமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்துள்ளன. இதற்கிடையில் அப்பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் மூலமாக காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இந்த பணிகளுக்காக புதுக்கண்மாய் வடக்கு பக்கம் இருந்த சுமார் 10 அடி உயரம் உள்ள கண்மாய் கரைகளை உடைத்து, தரைமட்டமாக்கி சாலை அமைத்துள்ளதாகவும், சுமார் ஒன்றை கிலோ மீட்டர் தூரம் நீர் பிடிப்பு பகுதியை சேதப்படுத்தி சாலை அமைத்துள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும், இது குறித்து காவல்துறையில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசுக்கு சொந்தமான கண்மாயை சேதப்படுத்திய தனியார் காற்றாலை மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அரசுக்கு சொந்தமான கண்மாயை மீட்க வேண்டும் அக்கிராமத்தினை சேர்ந்தவர்கள் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் (நீர் வள ஆதார அமைப்பு பாசனப்பிரிவு) தங்களது கோரிக்கை மனு அளித்தனர். தனியார் காற்றாலை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து கண்மாயை மீட்க வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.