கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக் கழிவுகள் கலப்பு: விவசாயிகள் வேதனை

கோவில்பட்டி பகுதியின் முக்கிய நீர் ஆதரமாக விளங்கும் மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக்கழிவுகள் கலந்ததால் விவசாயிகள் கவலை.

Update: 2021-11-10 05:43 GMT

மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக் கழிவுகள் கலப்பதால் நூரை நுரையாய் பொங்கி வழியும் தண்ணீர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மூப்பன்பட்டி கிராமத்தில் 2 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் மூலமாக சுமார் 300 ஏக்கர் பரபரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெற்று வருவது மட்டுமின்றி, மூப்பன்பட்டி, சங்கரலிங்கபுரம் மற்றும் கோவில்பட்டி நகர் பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதரமாகவும், நிலத்தடி நீர் உயர்வதற்கும் மிக முக்கிய கண்மாய்களாக உள்ளது. மழையின் போது கோவில்பட்டி நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், இனாம்மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்களில் இருந்து வெளியேறும் மழை நீர் ஆகியவை மூப்பன்பட்டி கண்மாய்களுக்கு தான் வந்து சேருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில்பட்டி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் மற்றும் நூற்பாலை, தீப்பெட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ரசயான கழிவுகளும் இந்த கண்மாய்களில் கலந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு கண்மாய்களில் தண்ணீரின் தன்மை மாறி விவசாயத்திற்கு பயன்படும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமலை செடிகள் என்று அழைக்கப்படும் ஆகாயத்தாமரையும் கண்மாய்கள் முழுவதும் பரந்து விரிந்து காணப்படுவதால் அதிகளவு தண்ணீர் தேங்கி விடமுடியாத நிலை உள்ளது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கண்மாய்கள் நீர் ஆதாரத்தினை கொண்டு சுமார் 300 ஏக்கரில் நெல், கத்தரிக்காய், தக்காளி ஆகியவற்றை சாகுபடி செய்வது வழக்கம். அதிலும் தென் தமிழகத்தில் மூப்பன்பட்டி கத்தரிக்காய்க்கு நல்ல மவுசு உண்டு. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களாக கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக 2 கண்மாய்களும் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் தற்பொழுது அருகில் இருக்கும் நெடுங்குளம் கண்மாய்க்கு மறுகால் சென்று வருகிறது. அவ்வாறு தண்ணீர் வெளியேறும் நிலையில் வெண்மை நூரை நுரையாய் பொங்கி வழிந்து செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் குடிநீர் ஆதராமாக இருந்த கண்மாய் நீர் இன்றைக்கு குளிக்க கூட தகுதியில்லாத தண்ணீராக மாறிவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே சாக்கடை நீர், ஆகாயத்தாமரையினால் தண்ணீர் தன்மை மாறிய நிலையில், மழைக்காலங்களில் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் திறந்து விடப்படுவதால் இன்றைக்கு வெண்மை நூரையுடன் தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தாண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மூப்பன்பட்டி கண்மாய்கள் உள்ள அமலைச்செடிகளை அகற்றுவது மட்டுமின்றி, சாக்கடை மற்றும் தொழிற்சாலை கழிவு நீர் கண்மாய்களில் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

Tags:    

Similar News