குடிநீர் பிரச்னை: கழுகுமலையில் காலிக்குடங்களுடன் அதிமுக ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-12 10:07 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் கலந்து கொண்ட பெண்கள்.

கோடை காலம் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த நிலையில், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பேரூராட்சி பகுதிகளில் கடந்த ஒருமாதமாக குடிநீர் சரியாக வழங்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், கழுகுமலை பேரூராட்சி உட்பட்ட 15 வார்டுகளில் கடந்த ஒரு மாதகாலமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கழுகுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழுகுமலை பேரூராட்சி அதிமுக நகர செயலாளர் முத்துராஜ் தலைமையில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் மட்டுமின்றி அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக செய்யப்பட்டு வந்ததாகவும், தற்போது குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுவதாகவும் குற்றம்சாட்டிய கடம்பூர் ராஜூ பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டு முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது, காலி குடத்துடன் வந்த பெண்களுக்கு அதிமுகவினர் குடிநீர் வழங்கி மகிழ்வித்தனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், உள்ளிட்ட அதிமுகவினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கழுகுமலை பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News