மதுரை- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சாலை மறியல்: 70 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 70 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-07-12 07:19 GMT

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 313 ஆவது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் குவிந்தனர்.

இந்த விழாவில் பங்கேற்பவர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் நுழைவு வாயில் பகுதியில் சிலர் ஏறி சமுதாய கொடியை ஏற்றி உள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை கீழே இறக்கி விட்டனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அவர்கள் மீது  லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஏற்படாத வண்ணம் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நுழைவு வாயிலில் ஏறி சமுதாய கொடியை ஏற்ற முயன்றதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் 70 பேர் மீது நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் மூலம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News