திருத்துறைப்பூண்டியில் நிவாரணம் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திருவாரூர்மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இந்த ஆண்டு பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20,000 வழங்க வேண்டும் ,முத்துப்பேட்டை பாதிக்கப்பட்ட ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து நிவாரணத்திற்காக ஆவணங்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை அறிவித்து வழங்கப்படாமல் உள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.விவசாயிகளின் நெல்லை முழுவதும் கொள்முதல் செய்யும் வரை கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை இடையே ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.