கொரோனா வழிகாட்டுதல்களைச் செயல்படுத்திட வலியுறுத்திப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் போக்குவரத்துக் கழகங்கள் உடனடியாகச் செயல்படுத்திடவேண்டுமென வலியுறுத்தி நன்னிலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
ஆனால் தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், வழிகாட்டி நெறிமுறைகள் எதையும் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம் கரோனா வழிகாட்டுதல்களைச் செயல்படுத்திடவேண்டும்.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான் போன்றவைகளை வழங்கிட வேண்டும். தினசரிப் பேருந்துகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும்.
மேலும் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பாதிக்கும் வகையில் நிர்வாகம் எடுத்து வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கங்கக் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்னிலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு மதியம், சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மத்திய மண்டல துணைச் செயலாளர் எஸ்.வைத்தியநாதன் தலைமையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக்கழக தொமுசவைச் சேர்ந்த கிளைச் செயலாளர் டி.தமிழரசன், அம்பேத்கர் விடுதலை முன்னணியின் மண்டலத் தலைவர் எல்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.