திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா
திருவாரூர் அருகே ராகு, கேது பரிகார தலமான திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் ஆலயத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, ராகு, கேது ஸ்தலமான திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் ராகு கேது தலமாக விளங்கி வருகிறது.
தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் திருப்பாம்புரம் அருள்மிகு வண்டார்குழலி உடனுறை அருள்மிகு பாம்புர நாதர் திருக்கோயிலில் ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக (ஏக சரீரமாக) இருந்து இறைவனை பூஜித்து அருள் பெற்றதால் இந்தக் கோயில் ராகு கேது ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
ராகு பகவான் மற்றும் கேது பகவானுக்கு பரிகார தலமாக விளங்க கூடிய இந்த கோவிலில் (21.03.22) இன்று மதியம் சரியாக 3.13 மணி அளவில் ராகு - கேது பெயர்ச்சி நடைபெற்றது. ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.
அதனை முன்னிட்டு ஒரே சரீரமாக அமைந்த ராகு கேதுவிற்கு சிறப்பு பூஜைகளும், சந்தனம், பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெளி மாநிலத்தில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜைகள் செய்தனர்.