அரவணைத்து அழிக்கும் பாஜக..துணிவு பெறுமா அதிமுக
அதிமுக விவகாரத்தில் ஒ.பன்னீர் செல்வத்தை பகடையாக வைத்துக் கொண்டு, எடப்பாடி அணியினரை பணிய வைக்க துடிக்கிறது பாஜக
இனியும் பொறுத்திருந்தால், இருப்பதையும் இழப்பதை தவிர ஒன்றுமில்லை, அதிமுகவிற்கு.ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை சாக்காக வைத்து, தன் சகுனி வேலையை சளைக்காமல் மீண்டும், மீண்டும் நடத்தி வருகிறது பாஜக.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவை ஆட்டி வைக்கும் சூத்திரதாரியாக பாஜக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு, அப்போதிலிருந்தே பன்னீர் செல்வத்தை கையில் எடுத்துக் கொண்டது. பன்னீர் செல்வம் பாஜகவின் கைப்பாவையாக மாறிய நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தார் சசிகலா.
அதை எதிர்த்து பன்னீர் செல்வத்தை தர்மயுத்தத்திற்கு தூண்டியதும் பாஜக தான். கட்சியைப் பிளந்து, சொந்தக் கட்சியின் ஆட்சியையே கவிழ்க்க தூண்டியதும் பாஜக தான். இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏக்களோடு பிரிந்த நிலையில், தடுமாறிய எடப்பாடிக்கு நிர்பந்தம் தந்து பன்னீரை இணைத்து வைத்ததும் பாஜக தான்.
ஆக, ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பன்னீரை பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்தது அதிமுக. ஆட்சி முடிவுக்கு வந்ததுமே பன்னீரைக் கழட்டிவிடத் தவறியதன் விளைவைத் தான் இன்று அதிமுக தலைமை அனுபவித்துக் கொண்டுள்ளது. ஒரு கட்டத்தில் பாஜகவின் நலன் விரும்பியாகவே அதிமுகவை வழி நடத்துவதில் ஆர்வம் கொண்ட வராகவும், மோடி, அமித் ஷாவின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலேயே குறியானவராகவும் பன்னீர் செல்வம் இருந்த காரணத்தால், ஒற்றைத் தலைமை தான் கட்சிக்கு தேவை என அனைவரும் உணரத் தொடங்கினர்.
ஒ.பி.எஸுடனான கருத்து மாறுபாடுக்குப் பிறகு, அதிமுக இரண்டு பொதுக் குழுக்களை நடத்தி உள்ளது. இதை நடத்த விடாதிருக்க ஒ.பி.எஸ் நீதிமன்றங்களை நாடினார். ஆயினும், "பொதுக் குழுவை நடத்தலாம்" என்றே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.
அந்த வகையில் இரண்டு பொதுக் குழுக்களுமே நீதிமன்ற ஒப்புதலுக்கு பிறகே நடத்தப்பட்டவையாகும். இதனால் இரு முறை பொதுக் குழுவைக் கூட்டி பன்னீர் செல்வத்தின் நீக்கத்தை உறுதிபடுத்தினர். பொதுக் குழுவையே கூட்டக் கூடாது எனத் தொடங்கி, ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்தின் வழியில் நிர்பந்திக்க முயன்று, அதிமுகவை ஸ்தம்பிக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார் பன்னீர் செல்வம். ஒரு கட்டத்தில் நீதிபதியின் கண்டனத்தையும் பெற்றார்.
மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தை நாடிய ஒபிஎஸ்சிடம் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியதாவது; ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும். பெரும்பான்மையானவரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கை பெற முடியாதவர்கள், நீதிமன்றங்களை ஒரு கருவியாக, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், கட்சி விதிகளின் படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். மேலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர்கள், உறுப்பினர்களை சமாதானம் செய்து, கட்சியின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், உறுப்பினர்களின் நம்பிக்கை பெரும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார். எனவே, நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கிறார்'' என தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்த அளவில் அவர் பாஜகவின் செல்லப் பிள்ளை. பாஜகவின் பேச்சை தட்டாத, தவறியும் சுயமாக செயல்படாத தத்துப் பிள்ளை. 'பன்னீர் இல்லாத அதிமுகவை கையாளுவது கொஞ்சம் கஷ்டம். இதோ இப்போது கூட ஈரோடு கிழக்கு தேர்தல் பணிமனையில் மோடி, ஜே.பி நட்டா, அண்ணாமலை படங்களை வைத்துள்ளார்.
ஆனால், எடப்பாடி அணியின் பணிமனையிலோ பாஜக உறவுக்கான எந்த அம்சமும் இல்லை. ஆக, இதையெல்லாம் பார்க்கும் போது அதிமுக ஒற்றைத் தலைமைக்குச் சென்றால், அப்புறம் எடப்பாடிக்கு துளிர் விட்டுப் போயிடும். நமக்கு அடங்காமல் போகவும் வாய்ப்புள்ளது என நினைக்கிறது பாஜக.
அதனால், தொடர்ந்து பன்னீரை பாதுகாக்கிறது. உயர் நீதிமன்றம் அங்கீகரித்தாலும் பன்னீரை உச்ச நீதிமன்றத்தில் முறையிட வைத்து, வழக்கை விசாரித்து முடித்தும், தீர்ப்பை சொல்ல விடாமல் அழுத்தம் தந்து கொண்டுள்ளது. மறுபக்கம் தேர்தல் ஆணையமும் தன் முடிவை அறிவிக்காமல் இழுத்தடிக்கிறது. ஒரு கட்சியின் 95 சதவிகித உறுப்பினர்கள் எடுத்த முடிவை அங்கீகரிப்பது தான் உலகம் எங்குமே நடக்கும் ஜனநாயகம்.ஆனால், இந்தியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் மதிப்பளிக்காத விஷயங்கள் மட்டுமே.
ஈரோடு கிழக்கு தேர்தலை பொறுத்த வரை பாஜக தயவோ, சின்னத்தின் உதவியோ இல்லாமல் தேர்தலை சந்திக்கலாம் என்பது ஏற்கனவே அதிமுக எடுத்து விட்ட முடிவு. இன்று தங்கள் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என அவர்கள் அறிவித்த நிலையில் தான் தங்கள் கையை மீறி அதிமுக செல்வதா? என அண்ணாமலையையும், சி.டி.ரவியையும் அனுப்பி, மீண்டும் இருவரையும் சேர்த்து வைப்போம் என பழைய பல்லவியை பாடுகிறது பாஜக.
பன்னீர் செல்வத்தை கட்சிக்குள் நுழைப்பது என்பது அதிமுகவின் வாயில் விஷத்தை நுழைப்பதற்கு சமமாகும். ஆனால், அந்தக் காரியத்தைத் தான் தொடர்ந்து கூச்சமில்லாமல் செய்து கொண்டுள்ளது பாஜக.அதுவும் ஏதோ அதிமுகவின் மீது அக்கறை இருப்பது போன்று பாவனை செய்து கொண்டு, பஞ்சமா பாதகத்தை அரங்கேற்றி வருகிறது பாஜக.
மூத்த அதிமுக தலைவர் பொன்னையன் கூறியது தான் அனைத்து தொண்டர்களின் உணர்வுமாகும். பாஜக வடநாட்டிலே எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது? பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன? அந்த ஆட்சிகளை எல்லாம் எப்படி எல்லாம் பாஜக பிடித்தது? என்பது உங்களுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம் என்ற பொன்னையன் கருத்து அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
பாஜக தங்களை அரவணைத்து அழிக்கிறது என்பதை அனைத்து நிலைகளில் உள்ள அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவே, பாஜகவை முற்றிலும் உதறி விட்டு, சுயேட்சையாக களம் காண்பது என்பது தான் அதிமுக உயிர்ப்போடு இயங்க ஒரே வழியாகும்.