கூட்டணியில் யாருக்கு அதிக பாதிப்பு?
2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா தனது இறுதி நாட்கள் வரை பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.;
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்திருந்த போது பெற்ற இடங்களையும், பிரிந்த போது பெற்ற இடங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தனியாக போட்டியிட்டு வந்த பாரதிய ஜனதா கட்சி, 1996 ஆம் ஆண்டு முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம், பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து சி.வேலாயுதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக, 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமக, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான ராஜீவ் காங்கிரஸ், சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக மட்டும் 18 இடங்களில் வென்றது. நீலகிரி, கோவை, திருச்சி தொகுதிகளில் வென்று, தமிழ்நாட்டிலிருந்து முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தது பாஜக
ஒரே ஆண்டில், பாஜக கூட்டணியை முறித்த அதிமுக, 1999 மக்களவைத் தேர்தல், 2001 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. இதில் 1999 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட்ட அதிமுக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2001 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். 141 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, 132 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் இணைந்த பாஜக, 4 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளையும், திமுக, காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட பெறாத நிலையில், கூட்டணியிலிருந்து ஜெயலலிதா வெளியேறினார். பின்னர் அவர் மரணமடையும் வரை பாஜக கூட்டணியில் அதிமுக இணையவில்லை.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக, விசிகவுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, பாஜகவை கழட்டி விட்டார். எனினும் திமுக அமைத்த மெகா கூட்டணியிடம் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்.
2009 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பாஜகவுடன் இணையவில்லை. மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்த அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது.
2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்த ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, ஓர் இடத்திலும் வெல்லவில்லை.
2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மோடியா? லேடியா? என கேள்வி எழுப்பிய ஜெயலலிதா 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றினார். திமுக கூட்டணிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் தருமபுரியில் பாமகவின் அன்புமணியும், கன்னியாகுமரியில் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.
2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு, 2019 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. இந்த தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிட்ட அதிமுக, தேனியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தது. 191 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை இழந்தது. எனினும், 4 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக-வுக்கு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டப்பேரவைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.
1998, 2004, 2019 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக பாஜக கூட்டணி இணைந்து போட்டியிட்ட நிலையில், 1998ல் மட்டுமே இரு கட்சிகளுக்கும் பரஸ்பரம் வெற்றி கிடைத்தன. மற்ற இரு தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. இதேபோல 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக ஆட்சியை இழந்தது.