தமிழ்நாடு அல்லது குஜராத்தில் வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட்

வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாடு அல்லது குஜராத்தில் அமைய உள்ளது

Update: 2023-09-30 09:15 GMT

பைல் படம்

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் சர்வதேச அளவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா ரவுண்டு கட்டி அடித்து வந்தாலும் டெஸ்லா-வுக்கு போட்டியாக பல நிறுவனங்கள் உருவாகி வருவது மூலம் விரைவில் டெஸ்லா ஆதிக்க நிலையை இழக்க செய்து விடும்.

இதுவும் தற்போது சந்தையில் பிரபலமான IC இன்ஜின் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் கார்களை பட்ஜெட் விலையில் தயாரிக்கும் வரை தான். இது மட்டும் நடந்து விட்டால் டெஸ்லா-வின் 10ல் ஒரு நிறுவனமாக கூட மாற வாய்ப்புகள் உள்ளது. இப்படியிருக்கையில் வியாட்நாம் நாட்டின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான வின்குரூப், 2017ல் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் களத்தில் இறங்கி வின்பாஸ்ட் (VinFast Auto) நிறுவனம் மூலம் வியட்நாம் நாட்டில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து உள்நாட்டில் விற்பனையில் அசத்திய பின்பு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வின்பாஸ்ட் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 6 வருடத்தில் வின்பாஸ்ட் தனது எலக்ட்ரிக் கார்களை பெரிய அளவில் மேம்படுத்தி அமெரிக்க மக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வெற்றியை உடனடியாக பணமாக்கும் முயற்சியில் வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு இதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வின்பாஸ்ட் நிறுவனத்தின் வர்த்தகம் வெளிநாடுகளை மையமாக கொண்டு இருக்கும் காரணத்தால் ஏற்றுமதிக்கு ஏதுவாக இருக்கும் தமிழ்நாடு அல்லது குஜராத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை என்பது துவக்க நிலையில் மட்டுமே இருக்கும் வேளையில் உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.

இந்த புதிய தொழிற்சாலைக்காக வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் மிகப்பெரிய முதலீட்டை செய்ய உள்ளது. இதேபோல் வின்பாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களை விற்பனை செய்வதற்கான திட்டத்தை இதுவரையில் எங்கேயும் பேசியது கிடையாது. சமீபத்தில் அமெரிக்க பங்குச்சந்தையில் வின்பாஸ்ட் பட்டியலிடப்பட்ட போது கூட Pham Nhat Vuong தலைமையிலான VinFast தயாரித்த கார்கள் வியட்நாம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஐரோப்பா, ஆசிய, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்ய துவங்கியதாக இந்நிறுவனம் அறிவித்து, இதை மேம்படுத்தும் வழிகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தது.

இதற்கு ஏற்றார் போல் வின்பாஸ்ட் கார்கள் Euro NCAP மற்றும் ASEAN NCAP தரத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ளது. இதுவே வின்பாஸ்ட் கார்களின் வெளிநாட்டு விற்பனைக்கு முக்கிய USP ஆக இருக்கும் என பேச்சப்பட்ட நிலையில், இத்தகைய கார்கள் தமிழ்நாட்டில் தயாரித்து, இந்தியா முழுக்க விற்கப்பட்டால் மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருக்கும்.

மேலும் புதிய தொழிற்சாலைக்காக வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாடு மற்றும் குஜராத் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசி வருகின்றனர். டெஸ்லா-வின் வெற்றியை பார்த்து வியந்து 2017ல் துவங்கப்பட்ட வின்பாஸ்ட் உலகளவில் தற்போது 17வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உள்ளது. முதல் இடத்தில் டெஸ்லா, 2வது இடத்தில் டோயோட்டா இருக்கும் நிலையில் வெறும் 7 வருடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து ஏற்றுமதி துவங்கினால் விரைவாக முன்னேற முடியும். வின்பாஸ்ட் கடந்த ஆண்டு 7400 கார்களை வியட்நாம் நாட்டில் மட்டும் விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு வெளிநாட்டிற்கு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ள காரணத்தால் 40000 முதல் 50000 கார்களை விற்க முடியும் என வின்பாஸ்ட் கணக்கிட்டு உள்ளது. தற்போது வியட்நாம் HAI PHONG பகுதியில் ஒரு தொழிற்சாலையும், ஜூலை 28 ஆம் தேதி அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் 2வது தொழிற்சாலையையும் துவங்கி இயங்கி வருகிறது.

Tags:    

Similar News