தேனி: தென்மேற்கு பருவமழை தொடக்கம்
தென்மேற்கு பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.;
தென்மேற்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் என்று அழைக்கப்படுகிறது.
தற்போது, தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தமிழகஅரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட 99 கண்மாய்களில் 26 கண்மாய்களும், உத்தமபாளையம் பெரியாறு வைகை வடிநில உபகோட்டத்திற்குட்பட்ட 36 கண்மாய்களில் 3 கண்மாய்களும் நிறைந்துள்ளது.
பாதிப்புகள் ஏற்படக்கூடிய முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதிகள், ஆற்றின் கரையோரப்பகுதிகள், நீர்நிலைகள் அருகில் வசிக்கின்ற பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக மலைச்சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்யவும், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட தேவையான மரஅறுவை இயந்திரங்கள், ஜே.சி.பி போன்ற வாகனங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரங்களையும் தயார் நிலையில் வைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.மணி, காவல்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பருவமழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04546-261093 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.