தேனி நகராட்சிக்கு முதல் பெண் தலைவர்: மேயராகும் யோகமும் உண்டு
தேனி நகராட்சி தலைவர் பதவிக்கு முதன் முறையாக பெண் ஒருவர் தலைவராக இந்த முறை தேர்வு செய்யப்பட உள்ளார்.
தேனி மாவட்டத்தில் தேனி, போடி, பெரியகுளம், சின்னமனுார், கம்பம், கூடலுார் ஆகிய ஆறு நகராட்சிகள் உள்ளன. இந்த ஆறு நகராட்சி தலைவர் பதவிகளும் பெண் தலைவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தேனியை தவிர்த்து மற்ற நகராட்சிகளில் பெண்கள் தலைவர் பதவி வகித்துள்ளனர்.
ஆனால் தேனி நகராட்சியில் இந்த முறை தான், முதன்முறையாக பெண் ஒருவர், நகராட்சி தலைவர் பதவியை அலங்கரி்க்க உள்ளார். தற்போது தேனி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவடையும். அதன் பின்னர், தேனி மாநகராட்சியாக அறிவிக்கப்பட உள்ளது. அப்போது நகராட்சி தலைவராக இருப்பவரே, முதல் மேயராகவும் பொறுப்பேற்பார். எனவே தேனி மாநகராட்சியின் முதல் மேயர் யோகமும், பெண்களுக்கே என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தனர்.