பசுமை புல் போர்த்திய தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் தற்போது பசுமைப்புல் போர்த்தி மிகவும் ரம்யமான அழகுடன் காட்சியளிக் கிறது.
தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடி நிறைவு பெற்று பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்திற்கு வளர்ந்துள்ளது. பெரியாறு பாசன பகுதிகள் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் நடவுப்பணிகள் முடிந்துள்ளது.
பெரியகுளம் பகுதிகள், மஞ்சளாறு பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் முடிந்து இப்பகுதிகளில் கதிர் பருவத்திற்கு வளர்ந்துள்ளது. இதனால் பெரியகுளம் முதல் கூடலுார் வரை உள்ள பகுதிகள் பசுமைப்புல் போர்த்திக் காணப்படுகின்றன.
கூடலுார், கம்பம், ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தம பாளையம், சின்னமனுார், குச்சனுார், கோட்டூர், சீலையம்பட்டி, பாலார்பட்டி, உப்புக் கோட்டை, வீரபாண்டி, தேனி, பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம் உட்பட அத்தனை பகுதிகளும் பசுமைப்புல் போர்த்திக் காணப்படுகின்றன.
இப்போதைய சூழலில் இந்த பகுதிகளில் காரிலோ, டூ வீலரிலோ பயணித்தால், குறைந்தது ஒரு பத்து இடங்களிலாவது இறங்கி நின்று போட்டோ எடுக்கத் தோன்றும். அந்த அளவு இப்பகுதிகள் பசுமை படர்ந்து, இயற்கையின் பேரழகு கொட்டிக் கிடக்கிறது. இந்த பேரழகுடன் இணைந்து வாழும் தேனி மாவட்ட மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஏன் தேனி மாவட்டத்தை கடந்து செல்லும், கேரளத்தவர்கள் கூட சில இடங்களில் நின்று தேனி மாவட்டத்தின் இயற்கை பேரழகை செல்பி எடுத்துச் செல்கின்றனர்.