மஞ்சப்பை பயன்பாட்டிற்கு மக்களை மாற்ற வேண்டும்: தேனி கலெக்டர் அட்வைஸ்
சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பொதுமக்களை முழுவதும் மாற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என கலெக்டர் முரளீதரன் அறிவுறுத்தினார்.;
தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் 177 நகராட்சி கவுன்சிலர்கள், 336 பேரூராட்சி கவுன்சிலர்கள், 130 ஊராட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.தண்டபாணி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் லுவலர் பொறியாளர் ஜெயமுருகன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் முரளீதரன் பேசியதாவது: கொரோனாவை முற்றிலும் தடுக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம். உள்ளாட்சி பிரதிநிதிகள் தடுப்பூசி போடாத மக்களை வீடு, வீடாக கண்டறிந்து நாளை மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசி போடச் செய்ய வேண்டும்.
மாவட்டத்தின் இயற்கை வளங்களையும், நீர் நிலைகளையும், உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பாலீதீன் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும். இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் முற்றிலும் உதவ வேண்டும். மக்களை முழுமையாக மஞ்சப்பை பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.