புரட்டாசி மாதமும் கை விட்டது.. கவலையின் உச்சத்தில் விவசாயிகள்
புரட்டாசி மாதமும் காய்கறிகளின் விலை வீழ்ச்சி விவசாயிகளை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
இயற்கை பேரிடர் காரணமாக தக்காளி விலை சில நாட்கள் மட்டும் கிலோ 100 ரூபாயினை கடந்து இருந்தது. அதற்கு எத்தனை விமர்சனங்கள், எத்தனை மீம்ஸ்கள், எத்தனை பேட்டிகள் சமூக வலைதளங்களும், இதர மீடியாக்களும் இந்த விஷயத்தை மிகப்பெரிது படுத்தி பிரச்னையாக்கி விட்டன. அரசு கூட பிரச்னையை கண்டு பயந்து ரேஷனில் தக்காளி விற்கும் நிலைக்கு வந்தது.
கடந்த மூன்று மாதமாக தக்காளியை வாங்க நாதியில்லை. உழவர்சந்தையில் முதல் தர தக்காளி விலையே கிலோ 15 ரூபாய். அப்படியானால் மொத்த மார்க்கெட்டில் விவசாயிடம் ஒரு கிலோ தக்காளியை 8 ரூபாய்க்கு தான் வாங்கியிருப்பார்கள்.
நிலத்தை உழவு செய்தல், தக்காளி நாற்று வாங்குதல், நடவு செய்தல், களையெடுத்தல், உரமிடுதல், நீர்பாய்ச்சுதல், பூச்சிகள் நோய் தாக்காத வகையில் பாதுகாத்தல், திருடர்கள், விலங்குகளிடம் இருந்து பாதுகாத்தல், முறையாக சம்பள ஆள் விட்டு பறித்து, கூடையில் ஏற்றி, வாகனம் மூலம் மொத்த விற்பனை கடைக்கு கொண்டு வந்து சேர்த்தல் ஆகிய அத்தனை செலவுகளும், வேலைகளும் செய்து, சுமார் மூன்று மாதங்கள் வரை காத்திருந்து, தக்காளி விற்கும் விவசாயிகளுக்கு ஒரு கிலோவிற்கு கிடைக்கும் விலை 8 ரூபாய் மட்டுமே. ஆனால் விவசாயிக்கு தற்போதைய சூழலில் ஒரு கிலோ உற்பத்தி செலவு 8 ரூபாயினை தாண்டி விடுகிறது.
பின்னர் எப்படி லாபம் கிடைக்கும். விவசாயிகள் எப்படி வாழ முடியும். விவசாயிகள் தான் எல்லாமும் என புகழும் அத்தனை பேரும், ஒரு ரூபாய் விலை கூடினாலும் கதறுவது தான் வேடிக்கையான விஷயம். ஒரு மொபைல் விலை இன்று 2 லட்சம் ரூபாய் வரை ஆகி விட்டது. ஒரு சினிமா டிக்கெட் விலை 1000ம் ரூபாயினை கடந்து விட்டது. இப்படி எல்லா பொருட்களின் விலைகளும் கொடிகட்டிப் பறக்கையில் விவசாய விளை பொருட்கள் விலை உயர்ந்தால் மட்டுமே நம் சமூகமே ஏற்க மறுக்கிறது. அதென்ன பாவமோ தெரியவில்லை.
வழக்கமாக விவசாயிகளுக்கு புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தங்களது விளை பொருட்களுக்கு ஓரளவு விலை கிடைக்கும். இந்த மாதங்களில் அறுவடையாகும் காய்கறிகள் விவசாயிகளுக்கு லாபம் தராவிட்டாலும், நஷ்டத்தை ஏற்படுத்தாது என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவும் மாறிப்போய் விட்டது.
புரட்டாசி மாதம் பிறந்து 19 நாட்களை கடந்து விட்ட நிலையிலும், காய்கறிகளின் விலை உயரவில்லை. அதுவும் காலையில் காய்கறிகள் பிரெஸ்ஸாக இருக்கும் போது ஒரு விலை கிடைக்கிறது. நேரம் செல்ல... செல்ல... விலை குறைந்து கொண்டே போகிறது. மாலையாகி விட்டால் பாதி விலை கொடுத்தாலும் போதும் என்ற நிலை தான் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
தேனி உழவர்சந்தையின் காலை 7 மணி காய்கறி விலை நிலவரத்தை காணலாம்: முதல் தர காய்கறிகளின் விலை மட்டும், கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தரிக்காய்- 20, தக்காளி- 15, வெண்டைக்காய்- 40, கொத்தவரங்காய்- 28, சுரைக்காய்- 14, பாகற்காய்- 30, பீர்க்கங்காய்- 28, முருங்கைக்காய்- 45, பூசணிக்காய்- 15, பச்சைமிளகாய்- 30, அவரைக்காய்- 50, தேங்காய்- 25, உருளைக்கிழங்கு- 30,
கருவேப்பிலை- 28, கொத்தமல்லி- 60, புதினா- 40, சின்னவெங்காயம்- 70, பெல்லாரி (பெரியவெங்காயம்)- 35, இஞ்சி- 95, வெள்ளைப்பூண்டு- 240, வாழைப்பூ- 10, வாழை தண்டு- 10, பீட்ரூட்- 14, நுால்கோல்- 30. முள்ளங்கி- 35, முருங்கைபீன்ஸ்- 75, பட்டர்பீன்ஸ்- 145, சோயாபீன்ஸ்- 120, முட்டைக்கோஸ்- 18, காரட்- 32, டர்னிப்- 30, சவ்சவ்- 20, காலிபிளவர்- 20, எலுமிச்சை- 90, பப்பாளி- 30, திராட்சை- 120, கீரை வகைகள் சராசரியாக- 25.