சிங்கப்பூர் அதிபராக தமிழர் தருமன் சண்முகரத்தினம்
சிங்கப்பூரின் 9 ஆவது அதிபர் தேர்தலில் 66 வயதுடைய தமிழரான தர்மன் சண்முகரத்தினம் பதவி ஏற்றுள்ளார்;
கடந்த 1.9.2023 அன்று நடைபெற்ற சிங்கப்பூரின் 9 ஆவது அதிபர் தேர்தலில் 66 வயதுடைய தமிழரான தர்மன் சண்முகரத்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பதிவான வாக்குகளில் ஏறத்தாழ 71 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தமிழரான அவரை தமிழ்நாட்டு தமிழரா இலங்கைத் தமிழரா என்று ஒரு கும்பல் இங்கு கூறு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தமிழை தாய் மொழியாக கொண்ட ஒரு தமிழர் அவர்.
நம் தர்மன் சண்முக ரத்னம் ‘லண்டன் °கூல் ஆப் எக்னாமிஸி'ல் இளங்கலை பொருளாதாரம் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வொல்ப்சன் கல்லூரியில் முதுகலை பொருளாதாரம் (தத்துவம்) பட்டமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MPA) பெற்றவர் ஆவார்.
ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம் அவர்கள், 2001 முதல் 2019 வரை துணை பிரதமராகவும், 2019 முதல் 2023 வரை மூத்த அமைச்சராவும் இருந்து கல்வி, நிதி, மனிதவளம், சமூக கொள்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியும் உள்ளார்.
2011 முதல் 2023 வரை ‘சிங்கப்பூரின் நாணய ஆணைய'த்தின் தலைவராகவும், 2019 முதல் 2023 வரை ‘சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு கழக'த்தின் (Deputy Chairman of the Government of Singapore Investment Corporation-GIC) துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.தர்மன் சண்முக ரத்னம் அவர்கள் 2001ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஜூரோங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்துள்ளார்.
ஏற்கெனவே தமிழர் எஸ். ஆர். நாதன் அவர்கள், சிங்கப்பூரின் அதிபராக கடந்த 1999 முதல் 2011 வரை பதவி வகித்து சிறப்பு செய்துள்ளார். அந்த வரிசையில் தர்மன் சண்முக ரத்னத்தின் வெற்றி சர்வதேச அளவில் தமிழ் பேசும் தமிழர்களுக்கான ஒரு பெருமையை உருவாக்கி கொடுத்திருக்கிறது.
சிங்கப்பூர் நாட்டில் சீனர்கள், மலாய்காரர்கள், இந்தியர்கள் என பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு சீனம். மலாய். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன. தன்னுடைய நீண்ட அனுபவத்தாலும், உயரிய சிந்தனைகளாலும், அறிவார்ந்த கல்வியாலும் மிக உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கும் நம் மரியாதைக்குரிய அண்ணன் தருமன் சண்முகரத்தினம் அவர்களுக்கு. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து தன் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறது. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்-வள்ளுவப்பெருந்தகை. நன்றி:ச.அன்வர் பாலசிங்கம்.