தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்க வருபவர்களில் சிலர், உணர்ச்சிவசப்பட்டோ, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவோ, அல்லது விரக்தியிலோ, தமது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சிக்கின்றனர். எனவே, போலீசார் மிகுந்த விழிப்புடன் இருந்து, இது போன்ற நபர்களை பாதுகாக்க வேண்டி உள்ளது.
இன்று, ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன், 48 என்பவர் நிலப்பிரச்னை காரணமாக தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆண்டிபட்டி அம்மச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள், 26 தனது குழந்தையுடன் வந்து குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க வலியறுத்தி தீக்குளிக்க முயன்றார். மதுரையை சேர்ந்த மூதாட்டி ராமுத்தாய், 80 தனது நிலத்தை உறவினர்கள் ஆக்கிரமித்து விட்டனர் எனக்கூறி, அவரும் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். மூவரையும் காப்பாற்றிய போலீசார், சம்மந்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கு, அவர்களது புகார் மனுவை அனுப்பி வைத்து விசாரிக்க அறிவுறுத்தி உள்ளனர்.