படிப்பு, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி... பயோ டெக்னாலஜி கோர்ஸ் ரிப்போர்ட்
மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும் பூமியின் ஆரோக்கியத்தையும் முன்னேற்றும் துறை.
இந்தக் கொரோனா தொற்றுக் காலம், அதை அழுத்தமாக நிரூபித்துள்ளது. அறிவியல் புதுமைகள் உலகை ஆளும் யுகத்தில், பயோடெக்னாலஜி படிப்பின் இயல்பு முதல் வேலை வாய்ப்பு வரையிலான தகவல் களைத் தருகிறார், புதுச்சேரி, ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயிரி தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜலக்ஷ்மி.
பயோடெக்னாலஜி என்றால் என்ன?
பயோடெக் என்பது உயிரியல் (Biology) மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் (Technology) கலவை. வாழும் நுண்ணுயிரிகளைக் கொண்டு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாத்தியமாக்கும் செயல்முறை. மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும் பூமியின் ஆரோக்கியத்தையும் முன்னேற்றும் துறை.
செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) முக்கியத்துவம் அதிகரித்து வரும் இன்றைய சூழல் நமக்குச் சொல்லும் செய்தி, திறமையான பயோடெக்னாலஜிஸ்ட்களுக்கு எதிர்காலத்தில் அளவற்ற தேவை உள்ளது என்பதே.
B.Sc, B.Tech... பயோடெக்னாலஜி படிப்பில் என்ன வித்தியாசம்?
மூன்று வருட பி.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்பு, மாணவர்களுக்கு தியரி அறிவைத் தரும். நான்கு வருட பி.டெக் பயோடெக்னாலஜி படிப்பு, மாணவர்களை அந்த தியரியை அப்ளை செய்ய வைப்பதில் கவனம் கொடுக்கும்; மேலும் பல அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் சார்ந்த உயிர் அறிவியல் பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இரண்டில் எந்தப் படிப்பாக இருந்தாலும், உடலுக்குள் ஒரு செல் எவ்வாறு உருவாகிறது, அது வளர்ந்து உறுப்புகளாக உருமாறுவது எப்படி போன்ற கேள்விகள், அதற்கான விடைகள் என்று ஆர்வம் கொண்டால், அந்தக் கேள்விகளே உயிரி தொழில்நுட்பப் படிப்பை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றும். அறிவை யும் உற்சாகத்தையும் தூண்டும்.
மேற்படிப்பு அவசியமா..?
எந்தத் துறையாக இருந்தாலும் இளநிலை பட்டம் என்பது மாத சம்பளத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அதுவே முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடிக்கும்போது மதிப்பு மிக்க வாய்ப்புகளை வசப்படுத்தலாம். அரசாங்கம் மற்றும் தனியார் நிதியுதவித் திட்டங்களையும் (Funding Project) பெறலாம். இதன் ஆரம்ப சம்பளமே 2 லட்சம் ரூபாயாக அமையும். மேலும், அறிவியல் சார்ந்த பல துறைகளிலும் வாய்ப்புகள் விரியும்.
வேலைவாய்ப்புகள் என்னென்ன..?
மருந்தகம், ஆராய்ச்சி மற்றும் நோயறிதல், ரசாயனம், ஆய்வகம், மரபியல், ஊட்டச் சத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு, விலங்குப் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில், பொது மற்றும் தனியார் துறைகளில் பயோடெக்னாலஜிஸ்ட்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆய்வில் ஈடுபடுபவர், மருத்துவ ஆராய்ச்சி இணை, மருத்துவ ஆராய்ச்சி மேலாளர், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர், இணை பேராசிரியர், உயிரியல் நிபுணர், உயிர் வேதியியலாளர், விஞ்ஞானி, விலங்குகள் பயோடெக்னாலஜிஸ்ட் என ஏராளமான நல்ல பணி வாய்ப்புகள் உள்ளன.
பயோடெக்னாலஜி பணிகள் பாதுகாப்பு குறைவானவையா?
எந்தத் துறையாக இருந்தாலும் அதனதன் தன்மைக்கேற்ப பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்யும். அதற்காக ஒவ்வொரு துறையையும் ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்க முடியுமா? நாம்தான் எச்சரிக்கையாகவும் விதிமுறைகளைப் பின்பற்றியும் செயலாற்ற வேண்டும். ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பயோடெக் ஆராய்ச்சி யாளர்கள் பல அபாயகரமான நுண்ணுயிரிகள், ரசாயனங்கள், கதிர் வீச்சு போன்றவை வெளிப்படும்போது தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பயோடெக்னாலஜிஸ்ட்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு அதிகம் என்பது கட்டுக்கதையா, உண்மையா?
உண்மைதான். இந்தியாவில் உள்ள பயோடெக் துறை உலகளவில் முக்கியப் பங்குதாரராக உருவெடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகள், இத்துறைக்கேற்ற பொருளாதாரத்தை நிறுவியுள்ளன. அதனால் தான் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் உயர்தர பயோடெக் ஆய்வில் வெளிநாடுகளில் ஆராய்ச்சி செய்ய இந்தியர்களும் விரும்பு கிறார்கள், வாய்ப்புகளும் அதிகம்.’’ இவ்வாறு கூறியுள்ளார்.