செல்லூர் ராஜூ காலேஜில் யாராவது ஒரு சீட் வாங்கி கொடுங்கப்பா!

செல்லுார்ராஜூ தொடங்க உள்ள கல்லுாரியில் யாராவது ஒரு சீட் வாங்கி கொடுங்கப்பா என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கிண்டலடிக்கின்றனர்

Update: 2023-03-14 06:00 GMT

பைல் படம்

அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவினர் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருவதால் பதிலுக்கு அதிமுகவினரும் அண்ணாமலை தலைமையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் . இதற்கு முன் இருந்த பாஜக எப்படி இருந்தது. அண்ணாமலை வந்த பின்னர் பாஜக எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு.

பாஜகவினருக்கு சகிப்புத்தன்மையும் வாய் அடக்கமும் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. கூட்டணி கட்சி என்பதற்காக தோளில் உட்கார்ந்து காதில் கடிப்பதை அதிமுக ஏற்காது என்கிறார். ஒரு காலத்தில் பாஜகவினர் மதிக்க கூடியவர்களாக இருந்தார்கள். இன்று தகுதியற்றவர்களாக விஷக்கிருமிகளாக இருக்கின்றார்கள் என்று கடுமையாக விளாசி எடுத்திருக்கும் செல்லூர் ராஜு, அடக்கி வைக்க வேண்டிய அண்ணாமலையே வாய்க்கொழுப்பாக பேசுகிறார். நாம் தான் பெரிய ஆள் என நினைப்பதால் இதுபோன்ற தவறு நடக்கிறது. முதலில் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரித்திருக்கிறார் செல்லூர் ராஜு.

அண்ணாமலையின் ஆதரவாளர் அமர்பிரசாத்ரெட்டி இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து பதிலடி கொடுத்து வருகிறார். பாஜகவின் நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்து விட்டார்கள் என்றதுமே முதலில் அதிமுக தலைமையை, குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தவர் அவர் தான். அவர் தொடங்கி வைத்தது தான் விவகாரம் இத்தனை பெரிதாகி இருக்கிறது. இந்த நிலையில் செல்லூர் ராஜீவிற்கும் அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாலாண்டு காலம் 420 -களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?

கட்சிக்கே பிரச்னை என்றதும், 'காட்சி கொடுங்கள் ஐயா' என்று ஓடோடி வந்தவர்களெல்லாம் இன்று, அகில உலக தலைவர்களாக காட்டிக் கொள்ள விழைகின்றனர். உதவி செய்தவர்களை துச்சமாக மதிப்பது தான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல் என்றால், அந்த அரசியல் எங்களுக்கு ஒரு நாளும் வேண்டாம். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை

அ.தி.மு.க. தொண்டர்கள் கோபப்பட்டால், பா.ஜ.க. தாங்காதுன்னு ஜெயக்குமார் அண்ணன் சொல்லியிருக்காங்க. இந்தக் கோபம் ஈரோடு தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க., மேல வரலையே அண்ணா என்று கடுமையாக விமர்சனம் செய்து வந்த அமர்பிரசாத் ரெட்டி,

இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.க வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது.வாய்க் கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க எனக்கு ஒரு ’சீட்’ வாங்கிக் கொடுங்கப்பா.

தலைவர் என்பவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார் என்பது தான் முக்கியம். நேர்மைக்குச் சொந்தக்காரராகவும்; பித்தலாட்டத்துக்கு துணை போகாதவராகவும் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு, திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் ஒரு நாளும் தேவையில்லை என்று அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News