ரஜினிகாந்த் யாரையும் தவறாக பேசவில்லை

ரஜினிகாந்த் யாரையும் கெட்ட வார்த்தையில் திட்டவில்லை என சந்திரபாபு நாயுடு டூவிட்டரில் பதிவிட்டுள்ளார்

Update: 2023-05-02 02:15 GMT

ரஜினிகாந்த் - சந்திரபாபு நாயுடு

மறைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகருமான என்.டி. ராமராவ் நூறாவது பிறந்த நாள் விழா அண்மையில் ஆந்திர மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. என்டி ராமராவ் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, என்டி ராமராவ் மருமகன் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இந்த விழாவை நடத்தினர். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று என்டி ராமராவ், சந்திரபாபு நாயுடு ,பாலகிருஷ்ணா ஆகியோருடன் தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அவர் செய்த சாதனைகள் குறித்து விழாவில் பேசினார். அதுதான் ஆந்திராவில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ரஜினியுடன் நாயகியாக நடித்து தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ரோஜா, ரஜினியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஹைதராபாத் நகரம் தொழில்நுட்ப ஹைடெக் நகரமாக மாறியதற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம். அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று ரஜினி புகழ்ந்து பேசியதை ரோஜா கடுமையாக விமர்சித்து வருகிறார். ரஜினிகாந்த் பேச்சை கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது. ஆந்திரா அரசியல் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. தன் பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும். ரஜினி ஒரு ஜீரோ என்று விமர்சித்து வருகிறார்.

அதேபோல் அமைச்சர் அம்பாதி ராம்பாபு, ரஜினிகாந்த் ஒரு கோழை. அரசியல் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என்று பேசி விமர்சித்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கோடலில் நானி , தமிழ்நாட்டில் வேண்டுமானால் ரஜினிகாந்த் ஹீரோவாக இருக்கலாம் ஆந்திராவில் அவர் ஒரு ஜீரோ என்று விமர்சித்திருக்கிறார் .

ஒய் .எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணனின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவருடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அதற்காக அவர் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரின் அநாகரீகமான விமர்சனத்தின் தாக்குதல் புண்படுத்தும் மற்றும் மூர்க்கத்தனமானது. சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும், ரஜினிகாந்த் போன்ற பழம்பெரும் ஆளுமை குறித்தும் ஒய்.எஸ்.பி தலைவர்கள் கூறியுள்ள கேவலமான கருத்துகள் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசின் போக்கை ரஜினிகாந்த் விமர்சிக்கவில்லை. அதுமட்டுமல்ல, யாரையும் கெட்ட வார்த்தையும் அவர் பேசவில்லை. அவர் பல தலைப்புகளில் தனது கருத்துகளை மட்டும் பகிர்ந்து கொண்டார். அப்படி இருக்கும் போது, அவர் மீது அதீத ஆணவத்துடன் வீண் விமர்சனம் செய்வதை தெலுங்கு மக்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிகரம் போன்ற ஆளுமை கொண்ட ரஜினியின், குணாதிசயத்தை உங்கள் கட்சி தலைவர்கள் விமர்சிப்பது வானத்தை பார்த்து எச்சில் துப்புவதைப் போன்றது. வாய் கிழிய பேசும் தலைவர்களை ஜெகன் மோகன் ரெட்டி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Tags:    

Similar News