அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை பெண் ஐபிஎஸ் அதிகாரி பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை பெண் ஐபிஎஸ் அதிகாரி இணையத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த இரண்டு பெண் அதிகாரிகளும் இலாக்கா இல்லாத அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ்., மற்றொருவர் ரூபா டி முட்கில் ஐ.பி.எஸ். கர்நாடக மாநில அறநிலையத்துறை இயக்குனராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். இவர் மீது தனிப்பட்ட மற்றும் பணி தொடர்பான பல்வேறு புகார்களை அம்மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனராக உள்ள ரூபா டி முட்கில் ஐ.பி.எஸ். எழுப்பியுள்ளார்.
பரப்பன அஹ்ரகார சிறையில் சசிகலா சொகுசாக இருப்பதாக குற்றம் சாட்டிய அதிகாரியான ரூபா ஐ.பி.எஸ். ஏற்கெனவே ரோகிணி சிந்தூரி மீது பல்வேறு புகார்களை கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ. மகேஷ் உடன் உணவகம் ஒன்றில் ரோகிணி சிந்தூரி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்ட ரூபா இது எதற்கான சமரசம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ரோகிணி சிந்தூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டிய வீட்டில் அனுமதி இல்லாமல் நீச்சல் குளம் கட்டியதாக அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான மகேஷ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது எதற்கான சமரசம் என்று ரூபா கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து “இது ஒரு மன நோய், சரியான மன நல மருத்துவரை பார்க்கவும்” என்று ரோகிணி சிந்தூரி பதிலளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் சமூக வலைதளத்தில் மோதல் முற்றிய நிலையில் பல்வேறு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ரோகிணி சிந்தூரி அனுப்பிய அவரது அந்தரங்க புகைப்படங்களுடன் கூடிய வாட்ஸப் பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டார் ரூபா. இருவரின் சண்டை சந்தி சிரித்ததைத் தொடர்ந்து ரோகிணி சிந்தூரி இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து விளக்கமளித்ததாகவும் தனது அந்தரங்க புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டது அதிகார துஷ்பிரயோகம் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இரு அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு இலாகா எதுவும் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.