கர்ப்பிணி மரணங்களை தவிர்க்கவே ‛சீமாங்க்’ சென்டரில் பிரசவம்

பிரசவ கால மரணங்களை தவிர்க்கவே கர்ப்பிணிகள் ‛சீமாங்க்’ சென்டருக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்;

Update: 2023-11-13 01:15 GMT

மகளிருக்கான சீமாங்க் மையம்(பைல் படம்)

பிரசவ கால மரணங்களை தவிர்க்கவே கர்ப்பிணிகள் ‛சீமாங்க்’ சென்டருக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 41 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஒன்றிய தலைமையிடங்களில் அமைந்திருக்கும் எட்டு சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கும், கர்ப்பிணிக ளுக்கும் ரத்தம் ஏற்றும் அளவுக்கு நவீன வசதிகள் உள்ளன. ஆனால் எந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிசேரியன் வசதிகள் இல்லை. தவிர தற்போது புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களில் பலருக்கு பிரசவம் பார்க்கும் அனுபவம் கிடையாது. இவர்களுக்கு தற்போது பிரசவம் பார்க்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் ‛சீமாங்க்’ சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 24 மணி நேரமும் ஆபரேசன் தியேட்டர்கள் தயார் நிலையில் இருக்கும். தவிர எம்.டி., டிஜிஓ டாக்டர்கள், மயக்கவியல் டாக்டர்கள், மருத்துவ உதவி உபகரணங்கள் உட்பட அத்தனை வசதிகளும் 24 மணி நேரமும் தயாராக இருக்கும். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‛ரிஸ்க்’ என நினைக்கும் கர்ப்பிணிகளை உடனே ‛சீமாங்க்’ சென்டர் மருத்துமனைகளுக்கு பரிந்துரைக்க நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம்.

தவிர ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள், கர்ப்பவாய்க்கு எதிர்திசையில் குழந்தையின் தலை திரும்பிய நிலையில் காணப்படும் கர்ப்பிணிகளை உடனே ஆம்புலன்ஸ் மூலம் ‛சீமாங்க்’ சென்டருக்கு அனுப்பி விட்டு, உடனே அந்த கர்ப்பிணிகள் குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட சென்டர் டாக்டர்களுக்கு தெரிவித்து அவர்களையும் தயார்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளோம். ‛சீமாங்க்’ பிரசவ மரணங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் பிரசவம் பார்ப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. தவிர கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் பிரசவ கால மரணங்கள் மிகவும் குறைந்துள்ளது. இதனை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.பிரசவ கால மரணங்கள் இல்லவே இல்லை என்ற நிலையை எட்டி விடுவோம். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News