சபரிமலை கார் பார்க்கிங்: பாஸ்டேக் வசதி அறிமுகம்
சபரிமலையில் கார் பார்க்கிங் செய்ய பாஸ்டேக் வசதி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.;
சபரிமலை சீசன் தொடங்கி விட்டது. கார்த்திகை மாதம் பிறக்க இன்னும் சில நாட்கள் இருந்தாலும், இப்போதே பக்தர்கள் பலர் விரதம் தொடங்கி விட்டனர். சபரிமலைக்கு இந்த சீசனில் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சீசனில் இருபத்தி ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பெரிய பிரச்னை கார் பார்க்கிங். இதற்கு கட்டணம் வசூலித்து ரசீது வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்களை தீர்க்க ஹேஸ்டேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நிலக்கல்லில் மிகப் பெரிய பார்க்கிங் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. 'பாஸ்டேக்' மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10-ந்தேதி நிலக்கல்லில் டோல்கேட் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான நேரமும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரு இடத்தில் மட்டும் கார் பார்க்கிங் வசதி போதாது, இன்னும் இரு இடங்களில் பார்க்கிங் வசதி தேவை என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.