பாஜவை நம்பி... நம்பி... விரக்தியில் புலம்பும் ஓபிஎஸ்

ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? இல்லையா? என்ற குழப்பம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது.;

Update: 2023-08-31 05:00 GMT

ஓ. பன்னீர்செல்வம்(பைல் படம்)

ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? இல்லையா? என்ற குழப்பம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், அதிமுக கூட்டணி விஷயத்தில் திமுக என்ன செய்ய போகிறது? என்ற ஆர்வமும் அதிகரித்து வருகிறது. பொதுக்குழு தீர்ப்பு சமீபத்தில் வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் & டீம் பெருத்த அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளதாக தெரிகிறது. பொதுக்குழு தொடர்பாக அப்பீலுக்கு இனி போனாலும்கூட, சிவில் வழக்குகளில் உடனே தீர்ப்புகள் வரப்போவதுமில்லை. அதனால்தான், தனிக்கட்சி என்ற யோசனைக்கு வந்துள்ளது. இதற்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிகிறது.

"இப்போதைக்கு தனிக்கட்சி வேண்டாம், டிசம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். தேவைப்பட்டால், தாமரை சின்னத்தில் போட்டியிடலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பிலிருந்தே பேச்சு நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால், ஓபிஎஸ் தரப்பு இதற்கு ஓகே சொல்லவில்லையாம்.

"இனியும் பாஜகவை நம்பி அரசியல் பண்ணுவது வேஸ்ட்.. நம்பி நம்பி மோசம் போகியிருக்கிறோம்... ஏமாந்துவிட வேண்டாம். சட்டரீதியாக அதிமுகவுக்கு உரிமை கோரும் அனைத்து வழிகளும் நமக்கு அடைக்கப்பட்டதற்கு காரணமே பாஜகதான்.

எப்படியும் எடப்பாடிக்கு சாதகமாகவே டெல்லி நடந்து கொள்ளும். தேர்தல் வரை நாம் எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டே வந்து, கடைசி நேரத்தில் நம்மை கழட்டிவிட்டு விட்டு, எடப்பாடியிடம் கைக்கோர்ப்பார்கள். பாஜகவை நம்பி வீணாக வேண்டாம் என்று ஓபிஎஸ்ஸுக்கு, சில சீனியர்கள் சொன்னார்களாம். ஓபிஎஸ்சும் இது தான் உண்மை என்று தனது ஆதரவாளர்களிடம் புலம்பியுள்ளார்.

இதே நிலைமைதான், ஈரோடு இடைத்தேர்தலின்போதும் ஓபிஎஸ்ஸூக்கு வந்தது. கடைசிவரை பாஜகவுக்காக காத்து கிடந்து, வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார் ஓபிஎஸ்.. அப்போதே கொங்குவின் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுப்பாகி விட்டார்கள்.. அப்படியே சூட்டோடு சூடாக கிளம்பி, எடப்பாடியை சந்தித்து கட்சியில் இணைந்து விட்டார்கள்.

இப்போதும் பொதுக்குழு தீர்மான முடிவுகள் தொடர்பாக தீர்ப்பு வந்துள்ளதால், இத்தனை நாளும் காத்துக்கிடந்த ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் சோர்ந்து விட்டார்களாம். அதனால், இவர்களில் ஒரு தரப்பினர் அதிமுக பக்கம் தாவ முயற்சித்து கொண்டிருக்கிறார்களாம். இவர்களையும் தட்டி தூக்கி கொண்டு வந்து விட, எடப்பாடி டீமும் களமிறங்கி உள்ளதாம்.

இப்படிப்பட்ட சூழலில், பாஜக Vs ஓபிஎஸ் டீம் அதிருப்திகள் வெடித்து கிளம்பி வருவதாக சொல்கிறார்கள்.. இலை + சின்னம் + கட்சி + மெஜாரிட்டி ஆதரவாளர்கள் என மொத்தமும் எடப்பாடியிடம் உள்ள நிலையில், எப்படியும் அவர் பக்கம் தான், பாஜக சாயும் என்பதால், ஓபிஎஸ் கடும் அதிருப்தியிலும் குழப்பத்திலும் உள்ளதாக தெரிகிறது. தனிக்கட்சியை தொடங்கவிடாமல் செய்வது, அதிமுகவின் வெற்றிக்காகத்தான் என்றே ஓபிஎஸ் தரப்பு நினைக்கிறதாம்.

ஆனால், பாஜகவோ இந்த விஷயத்தில் எந்த முடிவையும் உடனே எடுக்காது என்கிறார்கள். காரணம், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை விட, தினகரனுக்கு இருக்கும் ஓட்டு வங்கியை மிஸ் செய்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம். கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்து விட முடியாது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது. திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான். அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அவ்வளவு லேசில் இழந்துவிட பாஜக விரும்பவில்லை. அதுவும் இந்த முறை, தென் தமிழகத்தில் போட்டியிட முனைப்பு காட்டி வரும்சூழலில், அமமுகவின் ஓட்டுக்களை முழுமையாக ஒதுக்கி தள்ளவும் முடியாது.

ஒருவேளை, ஓபிஎஸ் தனியாக கட்சி துவங்கி, தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால், தென்மண்டலங்களில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில், அதிமுக சறுக்கலை சந்திக்கும் என்றும், அந்த 15 இடங்களிலும் திமுகவுக்கு களம் சாதகமாகிவிடும் என்றும் பாஜக கணக்கு போடுகிறது. அதுமட்டுமல்ல, பிளவுபட்ட அதிமுகவே ஒன்றிணைந்தாலும்கூட, அதிமுகவின் பழைய வாக்கு வங்கி வருமா? என்பதும் சந்தேகம் தானாம். அதனால், ஓபிஎஸ் விஷயத்தில் எந்த முடிவையும் பாஜக உடனே எடுக்காது என்கிறார்கள்.

ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேரும் சேர்ந்து, குறைந்த பட்சம் 10 தொகுதிகளிலாவது, வேட்பாளர்களை நிறுத்தினால், நிச்சயம் பாஜக & எடப்பாடி அணி தோல்வியை தழுவும். இது பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.. அதனால் தான், கடைசியாக ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறது.

மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்று ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும். அதற்கான தளத்தை இப்போதே உருவாக்க வேண்டும்.

ஆக.. ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினால், திமுகவுக்கான களம் சாதகமாகி விடும் என்று பாஜக நினைக்கிறது.. ஏற்கனவே, திமுகவின் பி- டீம் என்று ஓபிஎஸ்ஸை, அதிமுக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் இனி எப்படி நகர போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..

Tags:    

Similar News