ஓபிஎஸுக்கு இந்த 'தில்' எப்படி வந்தது?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்களும் இருக்கிறோம் அறிவித்து இருக்கிறார் ஓபிஎஸ்.
தமது அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்திய ஓபிஎஸ் தங்களது அணி சார்பிலும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதிமுக சின்னாபின்னமாக பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில் ஓபிஎஸுக்கு இந்த 'தில்'எப்படி வந்தது?
இடைத் தேர்தலில் எடப்பாடி அணிக்கு பாஜக ஆதரவு அளிக்கும் மன நிலையில் உள்ளதை உணர்ந்து இந்த முடிவை ஓபிஎஸ் எடுத்தாரா? அல்லது பாஜக, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கும், அதற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என நினைக்கிறாரா? இபிஎஸ் தரப்பிற்கு நெருக்கடி கொடுக்கவும், போட்டியில் களம் இறங்க தாங்கள் தயங்கவில்லை என்பதை காட்டுவதற்காக இதனை அறிவித்தாரா? என ஏகப்பட்ட கேள்விகள் வரிசை கட்டுகின்றன.
கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு எடப்பாடியை தேடிச் சென்றால் அவர்தான் உண்மையான அதிமுக என்ற தோற்றம் உருவாகும். அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முடிவை ஓபிஎஸ் அறிவித்துள்ளார் என்கிறார்கள் ஒரு தரப்பினர். எது எப்படியோ... விமர்சனங்கள், கருத்துகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு அறிவித்த கையோடு அப்படியே கூட்டணி கட்சி தலைவர்களான , பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரை தானே நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் ஓபிஎஸ்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி களம் இறங்குவது வெற்றிதோல்வியை தாண்டிய ஒரு கட்டாயமாகி விட்டது. எம்.எல்.ஏக்கள் ஆதரவு, கட்சி அலுவலகம், கட்சியின் வங்கிக் கணக்குகளை கையாள்வது என பல்வேறு விஷயங்களில் பின்னடைவை சந்தித்திருக்கிறார். அதிமுகவிற்கு உரிமைகோரும் விவகாரத்தில் சளைக்காமல் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ். இந்த முயற்சிகளில் வெற்றியோ? தோல்வியோ? கட்சியை உரிமை கோரும் விஷயத்தில் எடப்பாடி அணியின் ஒவ்வொரு அசைவுகளுக்கு எதிராகவும் ஓபிஎஸ் டஃப் கொடுத்து வருகிறார்.
எதிர் வரும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கவும், தாம் ஒதுங்கியிருந்தால் அதிமுகவிற்கு உரிமை கோரும் முயற்சியை கைவிட்டுவிட்டார் என்கிற பேச்சுகள் எழும் என்பதை தடுக்கவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது அணி சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் முடிவுக்கு ஓபிஎஸ் வந்திருக்கலாம் என்கிறார்கள். ஓபிஎஸ்தான் இரட்டை இலைக்கு சொந்தக்காரர் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும்போது தான் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உரிமைகோர முடியும். இந்த இடைத்தேர்தலில் களம் இறங்குவது ஓபிஎஸ் அணிக்கு அவசியமாகவும் உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தங்கள் அணி போட்டியிடும் என ஓபிஎஸ் அறிவித்தாலும், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எனக் கூறி அதிமுக ஒன்றுபடுவதற்காக இபிஎஸ் அணிக்கு அழைப்பு விடுக்கவும் தவறவில்லை. அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான ஏ பார்மிலும், பி பார்மிலும் தாம் கையெழுத்துப்போடத் தயார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். எடப்பாடியுடன் இணைந்து கையெழுத்துப்போடத் தயார் என நேரடியாகவே உணர்த்தியுள்ளார். ஆகவே ஓபிஎஸ் தனது அணி வேட்பாளரை இந்த இடைத்தேர்தலில் களமிறக்குவது சரியான முடிவே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்நிலையில், அதிமுக வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னர் இடைகால நிவாரணம் தேட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயர் பயன்படுத்த தற்காலிக அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்நிலையில், ஓபிஎஸ்-எடப்பாடி இருவரும் இணைந்து இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே ஆதரவு என ஜான்பாண்டியன் உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எடப்பாடிக்கு கடிவாளம் போட ஆரம்பித்துள்ளனர்.
அதிமுக ஒன்றிணைய தயாராக இருந்தும் எடப்பாடி முரண்டு பிடிப்பது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளரிடம் கேட்டோம். ''இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் எடப்பாடி தரப்பு சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு இரண்டாம் இடம் வந்தால் என்ன லாபம்? எடப்பாடி தரப்பு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று அதிமுகவை வழி நடத்த வாய்ப்பு கிடைக்கும் என்றால், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன் அல்லவா அதிமுகவை வழி நடத்திருக்க வேண்டும்?
அதிமுக பெல்டாகவும், தங்களது சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதியாகவும் இருக்கும் கொங்கு மண்டலத்தில் இரண்டாம் இடம் என்பதே எடப்பாடியின் படுதோல்விக்கு சமம். வாக்குப் பதிவில் 30சதவீதத்தை சுயேட்சை சின்னத்தில் பெறுவதற்கு 20 கோடி செலவழிப்பதால் என்ன பயன்? இதே தேர்தல் தெற்கு மற்றும் டெல்டா பகுதியில் நடந்து, எடப்பாடி அணி 30 சதவீதம் பெற்றால் அதுதான் வெற்றி. 2021ல் ஆலங்குளம் தொகுதியில் 18% மேல் வாங்கிய சுயேட்சை வேட்பாளர் ஹரி நாடாரின் அரசியல் போல் தான் ஈரோடு கிழக்கில் எடப்பாடியின் அரசியலும்.
எடப்பாடியாரின் சுயநல அரசியலால் அதிமுக எனும் எளிய மக்களின் கட்சி தேர்தல் களத்தில் காணமல் போவதுதான் வேதனை என்கிறார்கள். இருவரும் தங்களது முட்டல் மோதல்களை விடுத்து அதிமுகவை வளர்க்க, வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதே உண்மைத் தொண்டர்களின் உணர்வாக இருக்கிறது. இத்தகு அரசியல் சூழலில், ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த துணிச்சல் ! முடிவுக்கு பின்னணியில் தாமரை இருக்கிறதோ என்கிற சந்தேக மேகம் எடப்பாடி அணியைச் சூழ்ந்துள்ளது என்பதே நிதர்சனம்.