மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: கூடலுாரில் காலவரையற்ற உண்ணாவிரதம்
மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலுாரில் மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.;
கம்பம் அருகே லோயர்கேம்ப்பில் முல்லை பெரியாற்றில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல 1296 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கி உள்ளன. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தினை மாற்று வழிகளில் அதாவது ஆற்றின் வழியே தண்ணீர் கொண்டு சென்று வைகை அணையில் இருந்தோ, அல்லது நிலக்கோட்டை தடுப்பணையில் இருந்தோ மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த அத்தனை பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, இன்று கூடலுாரில் மக்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். முல்லைப்பெரியார் வைகை நீர்ப்பாசன சங்கம், பாரதீய கிஷான் சங்கம், கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு பிரிவு பொதுமக்கள், சங்க அமைப்புகள் இணைந்து இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.