தமிழக பாஜகவிற்குள் புதிய கூட்டணி!
பாஜகவிற்குள் புதிய கூட்டணி உருவாகியுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி முறிந்து விட்ட நிலையில் பாஜகவிற்குள் கட்சி நட்புகளும், சகோதர சகோதரிகளுமே முக்கியம் என்பதால் ஒருவருக்கொருவர் இறங்கி வந்து இணக்கம் காட்ட துவங்கியுள்ளனர்.
தமிழக அரசியலரங்கில் ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போலவே பா.ஜ.க.வும் தான். ‘அப்படின்னா அதுவும் பெரிய கட்சிதான்னு சொல்றீங்களா?’ என்று கேட்பீர்களேயானால் நீங்க ஒரு வெள்ளந்திங்க.
தி.மு.க, அ.தி.மு.க. மாதிரிதான் பாஜகவும்ணா, அந்த ரெண்டு பெரிய கட்சிகளுக்கு நிகராக பாஜகவிலும் கோஷ்டி பூசல் கன்னாபின்னான்னு உண்டு. அதுவும் சாதாரணமாக இல்லை, மற்ற இரண்டு திராவிட கட்சிகளிலாவது ஒரு மாவட்டத்தினுள் மாஜி அமைச்சர் தலைமையில் ஒரு கோஷ்டி, சிட்டிங் மாவட்ட செயலாளர் தலைமையில் ஒரு டீம், சிட்டிங் மந்திரி தலைமையில் ஒரு அணி என்று வி.ஐ.பி.க்கள் தலைமையில் கொத்து கொத்தாக பிரிந்து செயல்படுவார்கள்.
ஆனால் வெறும் நாளே நாளு எம்.எல்.ஏ. வைத்திருக்கும் பாஜகவிலோ பக்கத்து ஒன்றியத்துக்கே யாருன்னு தெரியாத ஆளுங்க தலைமையில் கூட புதுப்புது கோஷ்டிகள் உருவாகி, ஆளாளுக்கு முறைப்பும், விறைப்புமா திரிந்தனர்.
தம்மாத்துண்டு நிர்வாகிகளுக்குள்ளேயே பிரிவுகள், அணிகள் இருக்கும்போது அம்மாம் பெரிய தலைவர்களுக்குள் அந்த கட்சியில் கோஷ்டிகள் இல்லாமலா போய் விடும்? யெஸ், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையில் துவங்கி மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு அணியை வைத்துக் கொண்டு அங்கிட்டுமிங்கிட்டுமாய் அலைபாய்வதும், கட்சியை தெறிக்க விடுவதும் தான் கஷ்டமே.
அந்த வகையில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரான வானதிக்கும் இடையில் எப்போதுமே இடைவெளி இருந்து வந்தது. இருவருக்குள்ளும் உட்கட்சி அரசியல் இணக்கம் கிடையாது, யதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும்போதோ, ஒரே நிகழ்வில் அமரும் போதோ பரஸ்பரம் ஒரு ஃபார்மாலிட்டிக்காக பேசிக்கொள்வார்கள், தகவல்களை பரிமாறிக் கொள்வார்களே தவிர மற்றபடி உள்ளார்ந்த அரசியல் இணக்கம் இருந்தது இல்லை என்று ஒரு விமர்சனம் எப்போதுமே உண்டு.
இந்த விமர்சனத்தை எப்போதுமே இருவரும் மறுக்கவும் செய்வார்கள். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 25, 26 தேதிகளில் கோவை சிட்டியில் தனது ‘என் மண்! என் மக்கள்’ நடைபயணத்தில் இருந்தார் அண்ணாமலை. அப்போது செப்டம்பர் 26ம் தேதியன்று வானதி சீனிவாசனின் தொகுதியான கோவை தெற்குவினுள் நிகழ்வு நடந்தது.
இந்த நிகழ்வுக்கு அண்ணாமலை வந்த போது வரவேற்பில் ஜமாய்த்து விட்டனர். புகழ் பெற்ற ராம் நகர் ராமர் கோயில் முன்பாக பூரண கும்ப மரியாதை, பரிவட்டம் என்று பட்டாஸ் கெளப்பி விட்டனர் அண்ணாமலைக்கு. வழக்கமாக அந்த நடைபயண ஒருங்கிணைப்புக் குழு செய்திருக்கும் ஏற்பாடுகள் போக, வானதியின் தரப்பிலிருந்து சிறப்பான கூட்டமும், வரவேற்பும் தரப்பட்டதில் அண்ணாமலை மெய்சிலிர்த்துப் போனார்.
சகோதரர் அண்ணாமலையோடு அக்கா வானதி கரம்கோர்த்து அரசியல் செய்ய துவங்கியிருப்பது கோவை பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. அதேவேளையில் விமர்சகர்களோ “தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகளுக்குள் திடீர் இணக்கமும், சகோதரத்துவமும் பொங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இவ்வளவு நாட்களாக அதிமுக கூட்டணி இருந்தது. சில அரசியல் நகர்வுகளை கூட அவர்களை வைத்து செய்தனர்.
ஆனால் இப்போது கூட்டணி முறிந்து விட்ட நிலையில் சொந்த கட்சி நட்புகளும், சகோதர சகோதரிகளுமே முக்கியம் என்பதால் இப்படி இறங்கி வந்து இணக்கம் காட்ட துவங்கியுள்ளனர். உட்பகைகளை மறந்து ஒன்றாய் இறங்கி அடித்தால் தான் எதிரிகளை ஓட விட முடியும்! என்று புரிந்து கொண்டுள்ளனர்” என்கிறார்கள். எது எப்படியோ! வெற்றியோ, தோல்வியோ…ஒண்ணுமண்ணாக இருந்து களப்பணி செய்வதே கூட அரசியலில் அழகுதான்!